

தமிழகத்தில் உலர் தீவன பற்றாக்குறையை சமாளிக்க கிலோவுக்கு ரூ.2 என்ற வகையில், கால்நடை வளர்ப்போருக்கு தீவனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் இரு பருவ மழையும் பெரும்பாலான மாவட்டங்களில் பொய்த்துப் போனதுடன், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு புல் இல்லாததாலும், சோளம், மக்காச்சோளம் ஆகியவை சரியாக விளையாததாலும் வீரிய கால்நடை தீவன உற்பத்தி பரப்பளவு குறைந்த காரணத்தாலும் கால்நடை தீவனப் பற்றாக்குறையும் நிலவுகிறது.
கால்நடை தீவனத்தின் விலையும், விவசாய இடுபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால் கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந் நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவன உலர் வைக்கோல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநரும் வெளியிட்டுள்ள அறிக்கை:
கால்நடை பராமரிப்புத் துறையின் ஆய்வு அறிக்கையின் படி, கால்நடை வளர்ப்போர் நலன் கருதி தமிழக அரசு கால்நடைகளுக்கு உலர் வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் வழங்க ரூ.12 கோடியே 50 லட்சத்தை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு கிலோ வைக்கோல் ரூ. 2 என்ற விலையில், ஒரு மாட்டிற்கு, நாள் ஒன்றுக்கு 3 கிலோ வீதம், அதிகபட்சம் 5 மாடுகளுக்கு வாராந்திர தேவைக்கு ஏற்ப இந்த தீவனம் வழங்கப்படுகிறது. வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக உலர் வைக்கோல் தீவனத்தை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இத் திட்டத்தை செயல்படுத்த ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து, சூலூர், சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடங்கு அமைத்து விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விலைப்புள்ளிகளுக்கு வரவேற்பு
வைக்கோல் வாங்கி, 3 கிலோ கொண்ட கட்டுகளாகக் கட்டி, வண்டி மூலம் குறிப்பிட்ட விற்பனைக் கிடங்குகளில் அடுக்கி போர் அமைத்துக் கொடுப்பதுடன், வாரம் சுமார் 15 டன் வீதம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு வழங்க விருப்பமுடைய விவசாயிகள், ஒரு கிலோ வைக்கோல் விலையை குறிப்பிட்டு விலைப்புள்ளி கொடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனை கால்நடை வளர்ப்போர் தங்களுடைய குடும்ப அட்டை நகல், தங்களது புகைப்படம் மற்றும் கால்நடையின் விபரங்களை அரசு கால்நடை மருந்தகங்களில் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு விரைவில் கால்நடை தீவனம் வழங்கும் அட்டை அளிக்கப்படும். இந்த அட்டை இருந்தால் மட்டுமே இத்திட்டத்தை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வைக்கோல், ஈரமின்றி உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். தரம் இல்லாத வைக்கோல் கொள்முதல் செய்யப்படமாட்டாது. மேலும், வழங்கல் ஆணை பெற்ற விவசாயிகள் 10 நாட்களுக்குள் விநியோகத்தை துவங்க வேண்டும்.
விருப்பமுடைய விவசாயிகள் ஜன.23 ம் தேதிக்குள் விலைப்புள்ளியை, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், யூனியன் ஸ்கூல் ரோடு, டவுன்ஹால், கோவை -1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குறைந்த போட்டி விலைப்புள்ளி கோரியவர்களுக்கு ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.