Published : 15 Jun 2017 10:28 AM
Last Updated : 15 Jun 2017 10:28 AM

திருவாரூரில் தனித்தீவான செங்கழுநீர் ஓடைத்தெரு: குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லை - நகராட்சி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவாரூர் நகராட்சியின் 11-வது வார்டில் உள்ள செங்கழுநீர் ஓடைத் தெரு பகுதியில், செங்கழுநீர் ஓடையைச் சுற்றியுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நகராட்சியால் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களைப் போல கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின் றனர்.

செங்கழுநீர் ஓடையைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று வர மருதப்பட்டனம் பி சேனல் வாய்க்கால் மேற்குக் கரை வழியாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டிருந்தது. அந்த சிமென்ட் சாலை உடைந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. எனவே, சேதமடைந்த அந்த சிமென்ட் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு சுவரைப் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் கயிற்றின் மேல் நடப்பதைப்போல நடந்து செல்கின்றனர். இதுமட்டுமல்ல குடிநீர், சுகாதாரம் என்ற அனைத்து நிலைகளிலும் நகராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்று நகராட்சியை குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து செங்கழுநீர் ஓடைத்தெரு பகுதியைச் சேர்ந்த வீரகமலா கூறியது:

செங்கழுநீர் ஓடையில் சன்னதித் தெருவிலிருந்து வரும் சாக்கடைநீர் கலக்கிறது. இப்பகுதியில் உள்ள குப்பையை அகற்ற நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வராத தையடுத்து, இப்பகுதியினர் குப்பையை செங்கழுநீர் ஓடையில் கொட்டத் தொடங்கியதன் விளைவு இன்று சாக்கடையின் மத்தியில் குடியிருப்பது போல மாறிவிட்டது.

இப்பகுதியில் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்த பின்னர், ‘பி’ பிரிவு வாய்க் காலின் குறுக்கே சிறு பாலம் கட்டித்தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம். அது குறித்து நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித் துறை அதிகாரிகள், பனை மரத்தைக் குறுக்கே போட்டு நாங்கள் அமைத்த நடைபாதைக்கும் அனுமதி அளிக்கவில்லை.

- வீரகமலா

தற்போது, தவறிவிழுந்தால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் உடைந்துபோன சிமென்ட் சாலையில் தினமும் சென்று வருகிறோம். தீவிபத்து ஏற்பட்டால் கூட தீயணைப்பு வாகனமோ, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனமோ வர முடியாத நிலை உள்ளது. ஆட்டோவில் வந்து செல்லக் கூட பாதையின்றி இப்பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர். குடிநீரும் குறைந்த அளவே விநியோகிக்கப் படுவதால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

திருவாரூர் நகராட்சி அதிகாரி கள் இப்பகுதிக்கு வந்து பார்த்தால் தான் எங்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தெரியவரும். பல ஆண்டுகளாக அவதிப்பட்டுவரும் எங்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து, திருவாரூர் நகராட்சி ஆணையர் காந்தி ராஜிடம் கேட்டபோது, “செங்க ழுநீர் ஓடை பகுதியில் உள்ள வாய்க்கால் பொதுப்பணித் துறைக்கும், ஓடை தியாகராஜர் கோயிலுக்கும் சொந்தமானது. எனவே, இப்பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண பொதுப்பணி, அறநிலையத் துறைகளுடன் நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும், சுகாதார சீர்கேடை சரிசெய்ய, கூடுதல் குடிநீர்க் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக திருவாரூரை மாற்றும் நடவடிக்கை யின் கீழ் செங்கழுநீர் ஓடை அருகே திறக்கப்படாமல் உள்ள பொது சுகாதார வளாகம் குறித்து அப்பகுதி மக்களுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

- நகராட்சி ஆணையர் காந்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x