

சென்னை மாநகராட்சியில் மேற் கொள்ளப்படும் திட்டப் பணி களில் புதிய வழிமுறைகளை பின்பற்று வது குறித்தும், எதிர் வரும் மழை காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்க தேவையான செயல்திட் டங்களை உருவாக்குவது குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடை பெற்றது. மேயர் சைதை துரைசாமி, ஆணையர் பி.சந்தரமோகன் ஆகி யோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசிய தாவது:
மழைநீர் கால்வாய்களில் கழிவு நீர் இணைப்பு பல்வேறு இடங் களில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்தந்த பகுதியைச் சார்ந்த களப்பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் இதற்கு முழு பொறுப்பேற்று, சட்டத்துக்கு புறம்பாக மழைநீர் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விதி களை மீறும் வணிக நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் முன்பு, அவர்களின் தொழில் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்.
மழை காலத்தில் நீர் தேங்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர் வரும் மழை காலத்தில் கொசு உற்பத்தி அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும் என்றார்.