Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

காஞ்சிபுரம் மணல் ஏலத்தை ரத்து செய்த பொதுப்பணித் துறை

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மணல் ஏலம் நிர்வாகக் காரணங்களால் நிறுத்தப்பட்டதாக பொதுப்பணித் துறையின் கீழ் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் பழையசீவரத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மணல் கிடங்கை மாவட்ட நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் முடக்கியது. பின்னர் அந்த கிடங்கில் இருந்த 80 ஆயிரம் அலகு மணலை ஏலம் விடுவதற்காக, மனுக்கள் பெறப்பட்டன. 700 பேருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

காலை 10.30 மணிக்கு முதல் ஏலம் தொடங்கியது. இதில் மாமல்லபுரம் அடுத்த பட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜா, ஒரு லோடு (2 அலகுகள்) மணல் ரூ.12200 என்ற விலையில் ஏலம் எடுத்தார். ஏலம் எடுத்த ராஜாவிடம் அதற்கான ரசீதை செயற் பொறியாளர் கணேசன் வழங்கினார். ரசீதைப் பெற்றுக்கொண்ட ராஜா வெளியேறும்போது, செங்கல்பட்டு அடுத்த செட்டிபுன்னியம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், “இவ்வளவு விலை ஏற்றிவிட்டாயே…” என்று கூறி, ராஜாவை தாக்கியதாகச் கூறப்படுகிறது.

உடனே வெங்கடேசனை போலீசார் பிடித்தனர். அப்போது போலீ சாரை எதிர்த்து ஏலம் எடுக்க வந்த வர்கள் கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் தடியடி நடத்த முயன்றதும், ஏலம் எடுக்க வந்த வர்கள் சிதறிஓடினர்.

ஏலத்திற்கு எதிர்ப்பு

ஒரே ஒரு லோடு மணல் வாங்க வருபவர் அதிக தொகைக்கு ஏலம் கேட்க வாய்ப்புள்ளது. 100 லோடு வாங்க வருபவர் அவ்வளவு தொகைக்கு கேட்க முடியாது. இந்நிலையில் ஒரு லோடு மட்டும் வாங்க வருபவர் அதிக விலை கோரினால் அவர் வெற்றிபெற்றவராக அறிவிப்பதை ஏற்க முடியாது. அதனால் இந்த முறையைக் கைவிட வேண்டும் என்று ஏலம் எடுக்க வந்தவர்கள் கோஷமிட்டனர். 2-வது ஏலத்தில் பங்கேற்க வந்தோரையும் தடுத்தனர். இந்நிலையில் 100 பேருக்கு ஏலத்தில் பங்கேற்க அனுமதி சீட்டு வழங்கியிருந்த நிலையில், 25-க்கும் குறைவான நபர்களே 2-வது ஏலத்தில் பங்கேற்றனர்.

ஏலம் நிறுத்தம்

இந்நிலையில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கணே சன் வெளியிட்ட அறிவிப்பு:

நிர்வாக காரணங்களுக்காக ஏலம் முற்றிலுமாக நிறுத்தப் பட்டுள்ளது. மறு ஏலம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மறு ஏலம் குறித்த முடிவு எடுத்தபின், ஏலத்தில் பங்கேற்றவர்கள் வழங்கிய வரைவோலைகள் திரும்ப வழங்கப்படும். அது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்களின் தொடர்பு எண் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதைத் தொடர்ந்து ஏலம் எடுக்க வந்த லாரி உரிமையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கனிமவளம் ஏற்றும் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் தீனன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை சந்தித்து, ஏலம் மூலம் மணல் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். பழைய முறைப்படி, லாரி உரிமையாளர்களுக்கு ஒரு லோடு மணல் ரூ.626-க்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x