

சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைகளின் படங்கள் இரட்டை இலை சின்னத்தைக் குறிக்காது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள சிறிய பஸ்களில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, அரசு
சிறப்பு வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனு வருமாறு: தமிழக
அரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வருக்கு எதிராகவும் வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள நான்கு இலைகள் என்பது இரட்டை இலை சின்னத்தோடு பொருந்தாது.
கடந்த 13.5.2011 அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் போதிய போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன்பெறும் வகையில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி 50 சிறிய பஸ்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் அந்த பஸ்களில் இரட்டை இலை சின்னத்தை வரைந்து அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னத்தை பிரச்சாரம் செய்வதாகவும், அரசுப் பணத்தை அ.தி.மு.க.வின் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்துவதாகவும் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மனுதாரர் சுமத்தியுள்ளார்.
சிறிய பஸ்கள் சுற்றுச்சூழலோடு உகந்தவை என்பதை உணர்த்தும் வகையிலும், மாசு பரவலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்தான் இலைகள் வரையப்பட்டுள்ளன.
ஆகவே, அரசியல் காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை ஆஜரானார்.