Published : 30 Oct 2014 11:28 AM
Last Updated : 30 Oct 2014 11:28 AM

மனிதராகப் பிறந்த புண்ணியர்

துறவு பெற்ற சித்தார்த்தர், கவுதமர் என்றே அழைக்கப்பட்டார். அனோமை ஆற்றங்கரையை விட்டுச் சென்ற கவுதமர், கால்நடையாக அநுபிய நகரத்தை அடைந்தார். அந்த நகரத்துக்குள் செல்லாமல் அருகிலிருந்த மாந்தோப்பில் தங்கியிருந்தார். பிறகு, அங்கிருந்து புறப்பட்ட எட்டாவது நாளில் ராஜகிரஹம் நகரத்தை அடைந்தார்.

பிச்சை புகல்

நகரத்தின் கிழக்கு வாசல் வழியாகச் சென்று, வீடு வீடாகப் பிச்சை கேட்க ஆரம்பித்தார். தெருவில் இவரைக் கண்டவர்கள், “இவர் யார், இவர் யார்?” என்று வியப்புடன் கேட்டார்கள். ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள். அறிவுள்ள சிலரோ, “இவர் மனிதராகப் பிறந்த புண்ணியர்; இவர் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய மகான்” என்று சொன்னார்கள்.

அப்போது பிம்பிசார அரசனுடைய சேவகர்கள் இவரைக் கண்டு வியப்படைந்து அரசனிடம் விரைந்து சென்று, “துறவி ஒருவர் நகரத்துக்குள் வந்து வீடு வீடாகப் பிச்சை கேட்கிறார். அவரைப் பார்த்தால் - தேவகுமாரனா, நாகக் குமாரனா, கருடக் குமாரனா அல்லது மனிதக் குமாரனா என்று திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை” என்றார்கள்.

என்ன செய்கிறார்?

அரசன் அரண்மனை உப்பரிகைக்குச் சென்று தெருவில் பிச்சை கேட்கும் கவுதமத் துறவியைப் பார்த்தார். துறவியின் கம்பீரமான தோற்றத்தையும், அமைதியும் பொறுமையும் நிரம்பிய நிலையையும் கண்டு வியந்தார். பிறகு சேவகரைப் பார்த்து, “இவர் தேவகுமாரனாக இருந்தால், நகரத்தை விட்டு நீங்கும்போது ஒருவருக்கும் தெரியாமல் திடீரென மறைந்து விடுவார்.

நாககுமாரனாக இருந்தால் பூமிக்குள் மறைந்து விடுவார். கருடகுமாரனாக இருந்தால் ஆகாயத்தில் மறைந்து விடுவார். மனிதராக இருந்தால் தம்மிடம் உள்ள உணவை உட்கொள்வார். நீங்கள் இவரைப் பின்தொடர்ந்து போய்க் கூர்ந்து பார்த்து, இவர் என்ன செய்கிறார் என்று அறிந்து வந்து சொல்லுங்கள்” என்று கூறி அரசன் அனுப்பினார். அரசன் உத்தரவுப்படியே சேவகர்கள் சென்றார்கள்.

சிந்தைத் தெளிவு

வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்ற கவுதமத் துறவி, போதுமான உணவு கிடைத்தவுடன், தாம் வந்த வழியே நகரத்தை விட்டு வெளியே வந்தார். பிறகு சற்றுத் தொலைவில் உள்ள பண்டவ மலையின் அடிவாரத்துக்குச் சென்று அமர்ந்து, பிச்சையில் கிடைத்த உணவைச் சாப்பிடத் தொடங்கினார்.

பிச்சைச் சோறு அவருக்கு அருவருப்பை உண்டாக்கியது. அப்படிப்பட்ட எளிய உணவை அதற்கு முன் கண்ணாலும் பார்த்திராத அவர், அதை எப்படி உண்ண முடியும்? குமட்டியது.

தான் அரசகுமாரன் அல்ல என்பதையும், இப்போது எல்லாவற்றையும் துறந்த துறவி என்பதையும் தமக்குத் தாமே சிந்தித்துத் தெளிந்து, தன்னிடமிருந்த அருவருப்பை நீக்கி உணவை உட்கொண்டார் கவுதமர்.

நன்றி: மயிலை சீனி.

வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்'

தொகுப்பு: ஆதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x