

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நேற்று கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. தரவரிசைப் பட் டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் ஏ.கார்த்திக், தொழில் நுட்பக் கல்வி இயக்கு நர் எஸ்.மதுமதி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன்,தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி, பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜி.நாகராஜன், நுழை வுத்தேர்வு இயக்குநர் மல்லிகா ஆகியோர் முன்னிலையில் ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.
ரேண்டம் எண் ஒதுக்கீட்டு நிகழ்ச் சியின்போது உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 994 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் 22-ம் தேதி (நாளை) வெளியிடப்படும். விளையாட்டுப் பிரிவின் கீழ் உள்ள இடங்களுக்கு 1,807 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (நேற்று) நடக்கிறது.
24-ம் தேதி கலந்தாய்வு நடத்தப் படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டுக்கு 250 பேர் விண் ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறும்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.
தொழில்நுட்பக் கல்வி இயக் குநர் மதுமதி கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு நிலவரப்படி பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு எத்தனை கல்லூரிகள், எத்தனை இடங்கள் என்பது ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டுவிடும்’’ என்றார்.
பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி கூறும்போது, “2014-ம் ஆண்டு 114 பேருக்கும் கடந்த ஆண்டு 80பேருக்கும் ரேண்டம் எண் பார்க்கும் சூழல் ஏற்பட்டது” என்றார்.