முதல்வர் ஓபிஎஸ்-க்கு மிரட்டல்: வி.பி.கலைராஜன் மீது போலீஸார் வழக்கு பதிவு

முதல்வர் ஓபிஎஸ்-க்கு மிரட்டல்: வி.பி.கலைராஜன் மீது போலீஸார் வழக்கு பதிவு
Updated on
1 min read

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டியளித்த அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சசிகலா ஆதரவாளரும் அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் வி.பி.கலைராஜன், கடந்த 9-ம் தேதி போயஸ் தோட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தபோது, ‘அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடம்பில் கை இருக்காது’ என்று மிரட்டும் தொனியில் கூறினார்.

பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வி.பி.கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுகவின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான செல்லபாண்டியன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், வி.பி.கலைராஜன் பேசியது உண்மை என்பது தெரியவரவே, அவர் மீது 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 506(1) (வன்முறையைத் தூண்டுதல்) ஆகியப் பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, செல்லபாண் டியன் தனது புகாரை வாபஸ் வாங்கி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், வி.பி.கலைராஜன் ஆட்கள் தன்னை மிரட்டி புகாரை வாபஸ் வாங்கியதாக எழுதி வாங்கினர் என்று செல்லபாண்டியன் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வி.பி.கலைராஜன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன். புகார் கொடுத்தவரும் புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். அதன் பின்னரும் என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை சட்டப்படி சந்திப்பேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in