

ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்காவிட்டால் தமிழகத்தில் ஆந்திர அரசு பேருந்துகள், மற்றும் ஆந்திர நிறுவனங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் நடத்துமென அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திராவுக்கு கூலி வேலைக்குச் சென்ற 32 அப்பாவி மலைவாழ் தமிழர்களை 'செம்மரக் கடத்தல்காரர்கள்' எனக் கூறி ஆந்திர அரசு கைது செய்துள்ளது. 32 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், 32 தமிழரை விடுதலை செய்யவே முடியாது என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நல்லவர்கள் என்று யாரும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, கைது செய்யப்பட்டுள்ள 32 பேரும் செம்மரக் கடத்தல்கார்கள் என்று கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் முயற்சியால் 32 தமிழர்களுக்கும் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சால் அவர்கள் ஜாமீன் மறுக்கப்படும் அபாயம் உள்ளது. இது தமிழகம்- ஆந்திரா இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே பாலாறு விஷயத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சித்துள்ள ஆந்திர அரசு, தற்போது செம்மரக்கடத்தல் தடுப்பு என்று கூறி 32 தமிழர்களை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் விடுவிக்காவிட்டால், ஆந்திர அரசு பேருந்துகளும், ஆந்திரா நிறுவனங்களும் எங்களது போராட்டங்களை சந்திக்க நேரும்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.