

சாலை விபத்துகளின் எண்ணிக் கையைக் குறைக்க, மாணவர்கள் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேவை செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் யோசனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த பாலாஜி என்ற சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதும், மதுபோதையில் வாகனங்களை இயக்கு வதும் சாலை விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. மாணவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அவர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். இதன்மூலம் வருங்கால தலைமுறையினராவது பொறுப்புள்ள ஓட்டுநர்களாக இருப்பார்கள்.
மாணவர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன்படி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன் இருக்கும் 2 மாத இடைவெளியிலோ அல்லது 17 வயது நிறைவடைந் த பிறகோ ஏதாவது ஒரு மருத் துவமனையில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவில் சேவை செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு செய் யும்போது விபத்தால் பாதிக்கப் படுபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலைமையை நேரடியாக மாணவர்கள் உணர முடியும்.
மருத்துவமனையில் 15 நாட்கள் பயிற்சி பெற்றாலே அவர்களின் மனநிலை கண்டிப்பாக மாறும். பயிற்சியின் நிறைவாக மாணவர்களை, “நான் சாலை விதிமுறை களை கடைபிடிப்பேன், வாகனத்தை வேகமாக ஓட்ட மாட்டேன்” என்று உறுதிமொழி ஏற்கச் செய்யலாம். அதன்பிறகு மருத்துவமனை தரும் சான்றிதழைக் கொடுத்தால் தான் போக்குவரத்து அலுவல கத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்தால் எதிர்கால சந்ததியின ருக்கு கவனமாக வாகனம் ஓட்ட வேண்டியதன் அவசியத்தை புரிய வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மேலும் சில வாசகர்கள் ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர் புகொண்டு கூறியதாவது:
நம் நாட்டில் தற்போது மிகச்சிறிய கிராமங்களில்கூட நான்குவழிச் சாலைகள் உள்ளன. ஆனால் நான்குவழிச் சாலைகளில் பின்பற்ற வேண்டிய சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதுமான அளவு இல்லை. இதனால் அனைத்து இடங்களி லும் சாலைகளைக் கடப்பது, எதிர்த் திசையில் வாகனங்களை இயக்குவது, தங்கள் பகுதியில் சென்டர் மீடியன்களை தகர்த்து சாலையைக் கடக்க பாதைகளை ஏற்படுத்திக் கொள்வது என பல்வேறு விதிமீறல்களைச் செய் கின்றனர். இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன.
இதைத் தவிர்க்க நான்குவழிச் சாலைகள் தொடர்பாக சரியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். ஊடகங்களில் இதுபற்றி விளம்பரம் செய்வதுடன் ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகளையும் வைக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் மூலம் மாணவர்களிடையேயும் போது மான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.