

தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கவும், கட்டுமானத் தேவைக்கு ஆற்று மணலுக்கு பதிலாக ஜல்லி மணலை பயன்படுத்த உத்தரவிடவும் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகம் முழுவதும் உள்ள 18,789 நீர்நிலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து தமிழ்நாடு வீ்ட்டுவசதி வாரியம் கட்டுமானங்களை கட்டி வருகிறது. இதனால், 390 டிஎம்சியாக இருக்க வேண்டிய தண்ணீர் இருப்பு 250 டிஎம்சியாக குறைந்துவிட்டது. 2016-ம் ஆண்டு சரியான பருவநிலை இல்லாமல் மழை அளவும் குறைந்துவிட்டதால் நீர்நிலைகள் வறண்டுபோய் உள்ளன. இதனால் விவசாயம் பாழ்பட்டு கேள்விக்குறியாக அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
தவிர சட்டவிரோதமாக நடக்கும் மணல் குவாரிகளாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கட்டுமானத் தேவைக்கு ஆற்று மணலுக்குப் பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட கருங்கல் ஜல்லி மணலைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அண்டை மாநிலங்கள் ஆற்று மணலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டுமானங்களுக்கு மாற்று திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆற்று மணல் குவாரிகள் தடையின்றி இயங்கி வருகின்றன.
எனவே, தமிழகம் முழுவதும் ஆற்றுப்படுகைகளில் செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதித்து, கட்டுமானத் தேவை களுக்கு தயாரிக்கப்பட்ட ஜல்லி மணலை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நடந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.