

2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள கைலாஷ் சத்யார்த்திக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர், கைலாஷ் சத்யார்த்தி அவர்களுக்கு இந்த ஆண்டு, 2014ஆம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் ஏழாவது இந்தியார் கைலாஷ் சத்யார்த்தி.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்த சத்யார்த்தி, டெல்லியில் மின்னியல் பொறியாளராகப் பணியாற்றி வந்த நேரத்திலேயே குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தன்னுடைய வேலையை விட்டு விட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் வாயிலாக சுமார் 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தார்.
இவருக்கு அளிக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசினை கைலாஷ் அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் நோபல் பரிசு அமைதிக்காக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. மிக இளம் வயதிலேயே, 17 வயதில் நோபல் பரிசு பெறும் மலாலாவுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.