Published : 05 Nov 2013 08:11 PM
Last Updated : 05 Nov 2013 08:11 PM

சங்கரராமன் கொலை வழக்கு: நவ.12ல் தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்பு

சங்கரராமன் கொலை வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இம்மாதம் 12-ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, கே.எஸ்.குமார் உள்பட 15 பேர் ஆஜராகினர்.

சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து நீதிபதி சி.எஸ்.முருகன், இவ்வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்குரைஞர்கள், குற்றம்சாட்டப்பட்டோரின் சில வழக்குரைஞர்கள் வரவில்லை. எனவே வழக்கு விசாரணை தேதியை மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினர். அதற்கு, அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் தேவதாஸ் ஆட்சேபனை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, 'வரும் 12-ம் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் அன்றைய தினம் ஆஜராக வேண்டும். தங்கள் வழக்குரைஞர்கள் மூலம் தீர்ப்பு தேதியை வெளியிடுவது தொடர்பாக எந்த ஆட்சேபணையும் இல்லை என மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதி சி.எஸ்.முருகன் தெரிவித்தார்.

இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜரான, கொலைசெய்யப்பட்ட சங்கரராமன் மகன் ஆனந்தசர்மா, "தீர்ப்பு தேதியை அறிவிப்பது தொடர்பாக எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இவ்வழக்கின் ஆடியோ, வீடியோ கேசட்டுகளை தர வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 12-ம் தேதியன்று தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x