

ஆற்காடு அருகே முள்ளுவாடி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மது பானக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் மக்கள் குறை தீர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஆற்காடு அடுத்த முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த 50-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், ‘‘கலவை கூட்டுச்சாலை சந்திப்பு அருகே டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. அந்தக் கடையை அங்கிருந்து அகற்றி முள்ளுவாடி கிராமத்துக்குச் செல்லும் பாதையில் புதிதாக திறக்க இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
கோயில் மற்றும் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் இந்தக் கடை அமைவதால் பெரிதும் பாதிப்பு ஏற்படும். எனவே, புதிய இடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைவதைத் தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
சாதனை மாணவி பவித்ரா
அதேபோல், ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியும் என்பதைக் கண்டுபிடித்த அரக் கோணம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவி ஆர்.பவித்ராவை மாவட்ட ஆட்சியர் ராமன் பாராட்டி னார். மேலும், அந்த கருவி செயல் படும் விதம் குறித்து மாணவி பவித்ரா விளக்கினார்.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சதீஷ்குமார் கூறும்போது, ‘‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த மாதம் வேலூரில் நடந்தது. இதில், 7 தலைப்புகளின் கீழ் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்க வேண்டும்.
அதன்படி, எங்கள் பள்ளி மாணவிகள் நாம் பயன்படுத்திய பிறகு தூக்கி வீசும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களைக் கொண்டு படகு தயாரித்தனர். இந்தப் படகை வெள்ளப் பெருக்கின்போது பயன்படுத்த முடியும் என்று விளக்கினோம். அதேபோல், உடற்பயிற்சி செய்யும்போது மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை சேகரிக்கும் மாதிரியையும் காட்சிப் படுத்தினோம்.
இந்த இரண்டுக்கும் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் முதல் பரிசு கிடைத் தது. அத்துடன் ஹெல்மெட் அணிந் தால் மட்டுமே இருசக்கர வாகனத்தை இயக்கக்கூடிய ‘மாடர்ன் ஹெல்மெட்’ கருவியைத் தயாரித்த மாணவி பவித்ராவை அனைவரும் பாராட்டினர். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன் மாணவி பவித்ராவை நேரில் அழைத்துப் பாராட்டினார்’’ என்றார்.