

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விலைமதிப்பற்ற சிலைகளை திருட முயன்ற வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் பிடிபட்டனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் தப்பின.
ஓசூர் நகரின் அருகில் மலை மீது நூறாண்டுகள் பழமையான சந்திரசூடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பஞ்சலோகம் மற்றும் மரகத சிலைகள் உள்ளிட்ட சிலைகளும், தங்கத் தேர் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு கோயில் காவலாளி ரங்கன் பணியில் இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் கோயில் வளாகத்தில் மர்ம நபர்களின் நடமாட்டத்தையும், எதையோ உடைப்பது போன்ற ஓசையையும் ரங்கன் உணர்ந்துள்ளார். உடனே கோயிலில் இருந்த பணியாளர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு ஓசை வந்த பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது 5 இளைஞர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோயிலின் ஒரு பகுதியில் நின்றிருந்தனர். மேலும், ரங்கன் உள்ளிட்டவர்களை அந்த கும்பல் தாக்க முயன்றது. காவலாளி ரங்கன் முந்திக்கொண்டு தன்னிடம் இருந்த உருட்டுக் கட்டையால் கொள்ளையர்களை தாக்கியுள்ளார். இதனால் பயந்த கொள்ளையர்களில் 4 பேர் கோயிலின் சுவர் மீது ஏறி மறுபுறம் குதித்து தப்பியோடினர். தாக்குதலுக்கு ஆளான ஒருவர் சிக்கிக்கொண்டார்.
தகவல் அறிந்த ஓசூர் போலீஸார் விரைந்து சென்றனர். கோயிலில் இருந்து தப்பிய 4 பேர் மற்றும் கோயிலின் வெளியில் இருந்து உளவு பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் என 5 பேரும் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களில் ஒருவர் பிடிபட்டார்.
கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில், கொள்ளையர்கள் உள்ளே வந்தது, கோயிலின் கதவை கடப்பாரையால் உடைக்க முயன்றது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளைக் கொண்டு, பிடிபட்ட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்ட நபர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலையே இந்த கும்பல் கோயில் வளாகம் முழுக்க சுற்றி வந்து நோட்டம் பார்த்துள்ளது. பின்னர் கோயில் அருகில் இருந்த பூங்காவிலேயே இருந்துவிட்டு, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைய முயன்றுள்ளது தெரியவந்தது.