

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நேற்று நடைபெற்ற உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்
வழக்கறிஞர்களின் போராட்டத்தால் பாரிமுனையில் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்ட பாரிமுனை பேருந்து நிலையம்.
சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி கண்டன கோஷமிடும் வழக்கறிஞர் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள்.
வழக்கறிஞர்களுக்கான சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண் வழக்கறிஞர்கள் 15 பேர் உட்பட 596 பேர் நேற்றிரவு கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் செல்லும் 8 வழிகளிலும் நேற்று 5 அடுக்கு காவல் போடப்பட்டதால் உயர் நீதிமன்ற வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது. தலைமை நீதிபதியின் உருவப்படம் எரிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்களுக்கான சட் டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஜூலை 25-ம் தேதி (நேற்று) சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையே 5 நீதிபதிகள் குழு கருத்து கேட்டு முடியும் வரை இந்த புதிய விதிகளின்படி எந்த வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என தலைமை பதிவாளர் அறிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த வழக்கறிஞர்கள் “இந்த புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக எழுத்துபூர்வமாக அறிவித்தால் மட்டுமே போராட்டம் விலக்கிக்கொள்ளப்படும்’’ என தெரிவித்து திட்டமிட்டபடி ஜூலை 25-ல் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, 126 தமிழக வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததால் வழக்கறிஞர்களின் போராட்டம் சூடு பிடித்தது.
காவல் அதிகரிப்பு
சிஐஎஸ்எப் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு உள்ளே செல்வதற்கு உள்ள 8 வழிகளிலும் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டு வெளியே 100-க்கும் மேற்பட்ட தடுப்புகள் மூலம் 5 அடுக்கு காவல் போடப்பட்டது. கதீட்ரல் சாலையில் உள்ள தலைமை நீதிபதியின் வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வந்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடுத்தவர்கள், பத்திரிகையாளர்கள் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து நுழைவிடங்களிலும் கம்ப்யூட்டர் உதவியுடன் வழக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்ட பிறகே வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்ற பணியாளர்கள் ஸ்க்ரூ டிரைவர் கூட உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.
உயர் நீதிமன்றத்தின் உள்பகுதியில் சிஐஎஸ்எப் அவசர கால சிறப்பு படையினரும், வெளிப் பகுதியில் தமிழக கலவர தடுப்பு போலீஸாரும் என சுமார் 2 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீஸார் 8 இடங்களில் போலீஸ் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி அணிவகுத்து நின்றதால் உயர் நீதிமன்ற வளாகம் ஆள்நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி மயான அமைதியுடன் காணப்பட்டது.
முற்றுகைப் போராட்டம்
வழக்கறிஞர் சங்கங்கள் அழைப்பு விடுத்தபடி தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக் கணக்கான வழக்கறிஞர்கள் நேற்று காலை சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் திரண்டு உயர் நீதிமன்றம் நோக்கி பேரணியாக வர முயன்றனர். எஸ்பிளனேடு ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆரம்பித்து உயர் நீதிமன்றம் வரை தடுப்புகள் அமைத்து வழக்கறிஞர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் கோட்டை ரயில் நிலையம் அருகே சாலையின் நடுவே மேடை அமைத்து அங்கேயே வழக்கறிஞர்கள் கண்டன கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளின் இன்னொரு பிரிவினர் வடக்குப் பகுதியில் உள்ள பார் கவுன்சில் கேட், எம்பிஏ கேட் மற்றும் ஆவின் கேட் பகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, இரும்பு தடுப்புகளை இழுத்து தூக்கி எறிந்ததால் அங்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.உயர் நீதிமன்ற வெளிப் புற கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே இருந்தவர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. வழக்கறிஞர்கள் சிலர் கொளுத்திய வெயிலில் உரத்த குரலில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம் ஆகியோரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சில வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி மற்றும் பார் கவுன்சில் தலைவர்களின் உருவப் படத்தை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முற்றுகைப் போராட்டம் இரவு வரை நீடித்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது. பொதுமக்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவதியடைந் தனர். உயர் நீதிமன்றம் பஸ் நிறுத்தம் தற்காலிகமாக மூடப் பட்டது. கடைகள் அடைக்கப் பட்டன. இதனால் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு பஸ் மற்றும் ரயில்வே நிலையங்களுக்கு செல்ல நேரிட்டது.
இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அனை வரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் எதிரொலி யாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்ற முழு அமர்வு கூட்டம் நேற்று மாலை சுமார் முக்கால் மணி நேரம் நடந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையில் வழக்கறிஞர் சட்டதிருத்தம் தொடர்பான 5 நீதிபதிகள் அடங்கிய விதிகள் குழு கூட்டமும் நடந்தது. அதில் வரும் ஜூலை 29-க்கு முன்பும் கூட இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக வாபஸ் பெறும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திருமலைராஜன் அறிவித்துள்ளார்.