Published : 31 Mar 2017 10:58 AM
Last Updated : 31 Mar 2017 10:58 AM

கோவை மாவட்டத்தில் 4500 லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

வாகன காப்பீட்டு கட்டண உயர்வு, எரி பொருட்கள் மீதான வாட் வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவையில் 4500 லாரிகள் இயங்கவில்லை. இதனால் ரூ.100 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான கட்டண உயர்வு, வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகங்களில் உரிமம், ஆவண புதுப்பிப்புக்கு கட்டண உயர்வு, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த நிர்பந்திப்பது, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், அறிவித்தபடி நேற்று வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள, கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் வர்த்தகம் பெருமளவில் பாதித்தது. குறிப்பாக தொழில் நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்படும் இயந்திர, உதிரிபாக வர்த்தகம், காய்கறி, மளிகை உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து, நூற்பாலை ஏற்றுமதிப் பொருட்கள் உள்ளிட்டவை தேக்கமடைந்தன. கோவையில் உள்ள டி.கே.மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில், சரக்கு போக்குவரத்து தடைபட்டதால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

மாநில எல்லையான வாளையாறு, உக்கடம் லாரிப்பேட்டை, வடகோவை, கோவை ரயில்நிலையங்கள், குனியமுத்தூர், மணல் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.கலியபெருமாள் கூறும்போது, ‘மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான கட்டண உயர்வு, 15 வருடங்களுக்கு முந்தைய வாகனங்களுக்கான தடை ஆகிய உத்தரவுகளை நீக்க ஒப்புதல் கிடைத்துவிட்டது. வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் உரிமம் புதுப்பிப்புக்கு செய்யப்பட்டுள்ள கட்டண உயர்வு, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த நிர்பந்திப்பது, டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு ஆகிய கோரிக்கைகளுக்கு மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. முடிவு ஏற்பட்டால் மட்டுமே வேலைநிறுத்தம் கைவிடப்படும். ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும், அதில் கோவையில் 4500 லாரிகளும் இயக்கப்படவில்லை. இதனால் கோவையில் மட்டும் ரூ.100 கோடி வரை வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

வாளையாறு பகுதியில்…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் இயந்திரங்கள், புதிய வாகனங்கள் ஆகியவை தமிழக-கேரள எல்லையான வாளையாறு வழியாக கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும். இதனால், இவ்வழியே தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்லும்.

இந்நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக வாளையாறு பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. வாளையாறில் தமிழக எல்லையில் 200-க்கும் மேற்பட்ட லாரிகளும், கேரள வணிக வரித் துறை சோதனைச்சாவடி அருகே 300-க்கும் மேற்பட்ட லாரிகளும் நின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x