

மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 31- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.
மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவுதினம் அக்டோபர் 24-ந்தேதி திருப்பத்தூரிலும் 27-ந்தேதி காளையார் கோவிலிலும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்போன் கிராமத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.
கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் சாதி ரீதியான குரு பூஜைகளின் போது நடைபெற்ற கலவரங்களின் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன. 368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மருதுபாண்டியர் ஜெயந்தி மற்றும் தேவர் ஜெயந்தியை நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.
மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை விழாக்களுக்கு வருபவர்கள் வாடகை வாகனங்கள், டிராக்டர், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவற்றில் வர அனுமதி கிடையாது. பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சொந்த வாகனத்தில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். சொந்த வாகனங்கள் மூலம் வருகை தருபவர்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் வாகன பதிவு சான்றிதழ், வாகன ஓட்டுநரின் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோரின் விபரம் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் தெரிவித்து அதற்கான அனுமதி சான்றினை பெற்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்து வருவதோ, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பொருத்தி வருவதோ, சாதி மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வருவதற்கோ, கோசங்களை எழுப்புவதற்கோ அனுமதி கிடையாது. ஆயுதங்கள், பேனர்கள், கொடி மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட எதனையும் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.
திருப்பத்தூர், காளையார் கோவில் மற்றும் பசும்பொன் கிராமத்தில் மட்டும் பேனர்கள் காவல் துறையினரின் அனுமதி பெற்ற பின்னர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். பேனர்களில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து உள்ளுர் காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.