

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான தகவல்களை அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர் அய்யாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்தார்.
அப்போது, ''புதிய திட்டத்தை முழு வடிவில் அரசாணையாகத் தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை. அரசாணை நாளை தாக்கல் செய்யப்படும்'' என்று அய்யாதுரை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாளை வரை பத்திரப் பதிவுக்கான தடை தொடரும்.
செப். 9 முதல் மார்ச் 28 வரை தடை காலத்தில் 9,760 அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரப் பதிவுத்துறை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மறு உத்தரவு வரும் வரை ஏப்.21 ம் தேதியில் இருந்து வரும் மே 4-ம் தேதி வரை எந்தவொரு அங்கீகாரமற்ற மனைகளையும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் பின்னணி
தமிழகம் முழுவதும் ஏராளமான விளை நிலங்கள் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எனவே இதற்கு தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடைவிதித்து கடந்த 2016 செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் கடந்த மார்ச் 28-ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறுபத்திரப் பதிவு செய்யலாம் என ஏற்கெனவே எஸ்.கே.கவுல் விதித்த தடையை தளர்த்தி உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த விஷயத்தில் எந்த நோக்கத்துக்காக பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப் பட்டதோ, அந்த நோக்கத்தை இதுவரை தமிழக அரசு நிறை வேற்றவில்லை. புதிதாக வரைவு விதிகளையோ, கொள்கை முடிவையோ தமிழக அரசு எடுக்காத போது, ஏன் அதுவரை மீண்டும் தடை விதிக்கக்கூடாது.
இந்த விஷயத்தில் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. எனவே இந்த வழக்கு வரும் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோடை விடுமுறையில் விசாரிக்கப்படும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.