ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
2 min read

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் தடை விதித்தது. விலங்குகள் நல வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இம்மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடையை நீக்கும் வகையில், கடந்த 7-ம் தேதி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், காட்சிப்படுத்தப் படும் விலங்காக ‘காளை’ நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, குஜராத், ஹரியாணா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் களில் பாரம்பரியமாக நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயங்களை தொடர்ந்து நடத்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளை நடத்த சில நிபந்தனை களும் விதிக்கப்பட்டன. ஏற்கெனவே காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு ஆகியவை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பானுமதி விலகல்

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய விலங்குகள் நல வாரியம், மிருக வதை தடுப்பு அமைப்பான ‘பீட்டா’ மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனு தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி அடங்கிய அமர்வு முன்பாக பட்டியலிடப் பட்டது.

அவர் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், அரசு உத்தரவு ஒன்றின் மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது. எனவே, மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கும் வித்தியாசம் உண்டு. அவற்றுடன் இதை ஒப்பிடக் கூடாது. தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றம் கூடுதல் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கலாம்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மத்திய அரசு மற்றும் தமிழகம் உட்பட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘பீட்டா’ வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ‘பீட்டா’ அமைப்பு வரவேற்றுள்ளது. ‘இது எங்களுக்கு கிடைத்த பகுதி வெற்றி’ என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு எதிராக எங்கள் அமைப்பு தொடர்ந்து போராடும். மிக கொடூரமான இப்போட்டி சட்டத்துக்கு எதிரானது. பாரம்பரியமா, சட்டமா என்று வரும்போது சட்டம்தான் மேலோங்கி நிற்கும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இப்போட்டிகள் நிபந்தனைகளுடன் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டபோது, 2010 முதல் 2014 வரை ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். 1,100 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா, ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆலோசனை அமைப்பாக மத்திய விலங்குகள் நல வாரியம் இயங்கி வருகிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதன் மூலம், இந்த அமைப்பின் தலைவர் ஜெனரல் கார்ப் மற்றும் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா ஆகியோர் பதவி விலக நெருக்கடி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in