

எடப்பாடி பழனிசாமியின் அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றும் சட்ட விரோத அரசாக மாறுமானால் இனியும் மக்கள் மௌனப் பார்வையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்று காந்திய மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இரண்டு இலக்குகளையும் உயிர்க் கொள்கைகளாகக் கொண்டு காந்திய மக்கள் இயக்கம் இந்த மண்ணில் இயங்கி வருகிறது. மதுவினால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதை இந்த அரசுக்கு உணர்த்தவே மாநிலம் முழுவதும் 18 லட்சம் மாணவ மாணவியர் கையொப்பங்களை டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காகப் பெற்று அன்றைய கலால்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வசம் நேரில் வழங்கியும் பயனற்றுப்போனது.
இந்நிலையில் பூரண மதுவிலக்கை வேண்டி பாமக சட்டபூர்வமாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, இன்று மத்திய மாநில நெடுஞ்சாலைகளில் மது வெளிச்சத்தைப் பெருகச் செய்து இந்தியாவிலேயே மிக அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணமாக விளங்கிய 3300 மதுக்கடைகளை மூடுவதற்கு வழி பிறந்தது. பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும் முயற்சிகளில் ராமதாஸும், அன்புமணியும் உள்ளார்ந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை காந்திய மக்கள் இயக்கம் மனமுவந்து பாராட்டுகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பணிந்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நகர சாலைகளாகப் பெயர் மாற்றம் செய்து, சாராய வருவாய் சரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள தமிழக அரசு தவறான வழிகளில் ஈடுபடுமானால் அதற்குரிய விலையைத் தர வேண்டியிருக்கும்.
மக்கள் விரோத அரசாக, ஊழல் மலிந்த அரசாக, விவசாயிகளின் நலன் காக்கத் தவறிய அரசாக விளங்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றும் சட்ட விரோத அரசாக மாறுமானால் இனியும் மக்கள் மவுனப் பார்வையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்று காந்திய மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுக்கிறது'' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.