

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்கால நாணயங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட் டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகம் (மியூசியம்) உள்ளது. இதில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் கன்னிமரா நூலகம், நிரந்தர புத்தக விற்பனை நிலையம் மற்றும் கலையரங்கமும் அமைந்துள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
கன்னிமரா நூலகத்தின் பின்புறம் படிமக்கூடம் உள்ளது. 2 மாடி கொண்ட இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் முகலாயர் காலத்து நாணயங்கள் உள்பட பல்வேறு பழமையான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் ஐம்பொன் சிலைகள், படிமங்கள் வைப்பட்டுள்ளன. இந்தக் காட்சிக்கூட வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், படிமக் கூடத்துக்கு சனிக்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியர்கள், நாண யங்கள் வைக்கப் பட்டிருந்த கண்ணாடி பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர். நாணயங்கள் கீழே சிதறிக் கிடந்தன. முதல் மற்றும் இரண்டாவது மாடிக்கு சென்று பார்த்தபோது, ஐம்பொன் சிலைகள் இடம் மாறி இருந்தன.
இதுபற்றி அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸா ரிடம் ஊழியர்கள் கூறினர். போலீ ஸார் மற்றும் அருங்காட்சியக உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். காட்சிக் கூடத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர்.
முகலாயர் கால நாணயம்
கூடத்தில் இருந்த முகலாயர் காலத்து நாணயங்கள் உள்பட பல பழமையான நாணயங்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காட்சிக்கூடத்தில் பணி யாற்றும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐம்பொன் சிலைகள் ஏதாவது கொள்ளை போயுள்ளதா என்பது பற்றி போலீஸாரோ, அருங்காட்சியகத்தினரோ எதுவும் தெரிவிக்கவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
ஜன்னல் கண்ணாடி உடைப்பு
படிமக்கூடம் கட்டிடத்தின் 2-வது தளம் பின்புறத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடத்தின் அருகில் உள்ள மரத்தில் ஏறி, ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து படிமக்கூடத்தின் 2 வழிகளையும் தற்காலிகமாக போலீஸார் அடைத்துள்ளனர். காட்சிக் கூடத்துக்குள் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.