

தங்கத்தில் தொடர்ந்து முதலீடு அதிகரிப்பதால், விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.23,784-க்கு விற்கப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,928-க்கும், ஒரு பவுன் ரூ.23,424-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.45 என பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,973-க்கும், பவுன் ரூ.23,784-க்கும் விற்றது.
சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதால், சர்வதேச அளவில் பொருளாதார சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள் ளது. இதைத் தொடர்ந்து, வேறு சில நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. தேவையும் அதிகரிப்பதால், தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-க்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.23,700-ஐ தாண்டியுள்ளது’’ என்றார்.