மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க மாநில அறிவுரைக்குழு கூட்டம் கூடியது: கட்டணம் உயர்த்தவும், இலவச மின்சாரத்துக்கும் உறுப்பினர்கள் எதிர்ப்பு

மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க மாநில அறிவுரைக்குழு கூட்டம் கூடியது: கட்டணம் உயர்த்தவும், இலவச மின்சாரத்துக்கும் உறுப்பினர்கள் எதிர்ப்பு
Updated on
2 min read

மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின், மாநில அறிவுரைக் குழுக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற உறுப்பினர்களில் பலர், கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று கோரிக்கை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, அதுகுறித்து அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை அறிய வேண்டும். இதற்காக மாநில அறிவுரைக் குழு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழுவில் ஆணையத்தின் தலைவர் அக்‌ஷய் குமார், உறுப் பினர்கள் நாகல்சாமி, ராஜகோபால் மற்றும் நுகர்வோர் நலத்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் அரசுத் தரப்பு உறுப்பினர்களாகவும், தமிழக மின் வாரிய சேர்மன் ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி மேம்பாட்டு முகமை சேர்மன் சுதீப் ஜெயின், தனியார் தொழிற்சாலைகள் சார்பில் டான்ஸ்டியா கோபாலகிருஷ்ணன், சிஐஐ ரவி, ரயில்வேயின் தலைமைப் பொறியாளர் குல்ஷேத்ரா, நுகர்வோர் தரப்பில் கதிர்மதியோன், தேசிகன், வெள்ளையன் என மொத்தம் 21 உறுப்பினர்கள் உள்ளனர்.

பொதுவாக மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் முன்பு, மாநில அறிவுரைக் குழுக் கூட்டம் நடைபெற வேண்டும். இம்முறை கூட்டம் தாமதமானது. இதுகுறித்து, தி இந்து வில் கடந்த 12ம் தேதி செய்தி வெளியானது.

இந்நிலையில், மாநில அறிவுரைக்குழுக் கூட்டம், நேற்று முன்தினம் எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்தப்பட்டது. ஆணைய சேர்மன் அக்‌ஷய்குமார், மின்வாரிய சேர்மன் ஞானதேசிகன் பங்கேற்ற இக்கூட்டத்தில், மின் கட்டண உயர்வு குறித்து மின் வாரிய அதிகாரிகளும், ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளும் விளக்கமளித்தனர்.

அப்போது உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி யது. ஆண்டுதோறும் சிறிய அளவில் உயர்த்தி நிலைமையை சமாளிக்காமல், ஒரே நேரத்தில் மொத்தமாக 10 சதவீதம் முதல் சுமார் 30 சதவீதம் வரை உயர்த்துவது, பொதுமக்களுக்கும், தொழிற்துறையினருக்கும் பெரும் சுமையாகும் என்று தெரிவித்தனர்.

இதேபோல், இலவச மின்சாரம் வழங்குவதாலும், விவசாய மின் சாரத்துக்கு கணக்கே இல்லாத தாலும் மின் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவது சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.

வணிகர்கள், தொழிற் துறை யினருக்கு, தடையில்லாத, அதேநேரத்தில், மின் பயன்பாடு கட்டுப்பாடின்றி வழங்கப்பட வேண் டும். அப்போதுதான் தொழில் வளம் பெருகுவதுடன், மின் வாரியத் துக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மின் வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் மின் கட்டண உயர்வு குறித்து, விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமுள்ள நுகர்வோரில் சுமார் 60 லட்சம் பேர், மிகவும் குறைவாக இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் என்று பயன்படுத்துகின்றனர். சுமார் 40 லட்சம் பேர் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மிகக்குறைந்த கட்டண அதிகரிப்பே இருக்கும் என்று விளக்கமளித்து, கூட்டம் நிறைவடைந்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in