கிராமங்களில் ‘அம்மா பூங்கா’, ‘அம்மா உடற்பயிற்சிக் கூடம்’: சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கிராமங்களில் ‘அம்மா பூங்கா’, ‘அம்மா உடற்பயிற்சிக் கூடம்’: சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன் - பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Published on

கிராமங்களில் ரூ.100 கோடியில் 500 அம்மா பூங்காக்களும், ரூ.50 கோடியில் 500 அம்மா உடற் பயிற்சிக் கூடங்களும் அமைக்கப் படும். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

கிராம ஊராட்சிகளில் குழந்தை கள், பெண்கள், பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமென்ட் பெஞ்சு கள், குடிநீர் வசதிகள், புல் தரை, பசுமைத் தோட்டம், கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 அம்மா பூங்காக்கள் ரூ.100 கோடியில் இந்தாண்டு அமைக் கப்படும். கிராமப் பகுதி இளைஞர் களுக்கு உடல்திறன் மற்றும் மனவளத் திறனை மேம்படுத்த அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். ஒவ்வொன்றும் ரூ.10 லட்சத்தில் 500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத் தில் வங்கிகள் வழங்குவதன் மூலம் பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.26 ஆயிரத்து 460 கோடி கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கிராமப் பகுதி களின் தெருக்களில் 16 லட்சத்து 46 ஆயிரம் குழல் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. தெரு விளக்குகளை முறையாகப் பரா மரித்தல், மின்சார செலவைக் குறைத்தல் மற்றும் ஒளி விளக்கு களின் நீடித்த செயல்திறன் ஆகிய வற்றை கருத்தில் கொண்டு கிராமப் பகுதிகளில் உள்ள குழல் விளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குகளாக மாற்றியமைக்கப் படுகின்றன. 8 லட்சத்து 24 ஆயிரம் குழல் விளக்குகள் எல்இடி தெரு விளக்குகளாக ரூ.300 கோடியில் மாற்றும் பணிகள் நடக்கின்றன. இந்தாண்டு மீதமுள்ள 8 லட்சத்து 22 ஆயிரம் குழல் விளக்குகளும் ரூ.300 கோடியில் எல்இடி தெரு விளக்குகளாக மாற்றப்படும்.

சிறப்பு மாத ஓய்வூதியம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த பல் வேறு சங்கங்கள் கிராம ஊராட்சி செயலர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது வழங்கப்படும் சிறப்பு மாத ஓய்வூதியம் மற்றும் ஒட்டுமொத்த தொகையை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். அதனை ஏற்று, கிராம ஊராட்சி செயலர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் ரூபாயாகவும், சிறப்பு மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in