

அரியலூர் மாவட்ட ஐம்பொன் சிலைகள் அமெரிக்கக் கலைக்கூடத்துக்கு கடத்தப்பட்ட வழக்கில் சிக்கி புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர், விசாரணைக்காக அவ்வப்போது அரியலூர் நீதிமன்றங்களுக்கு ஆஜராவது தவிர தமிழகத்தில் சிலை திருட்டு வழக்கு கிடப்பிலேயே உள்ளது.
ஆனால் சுபாஷ் கபூரிடம் டாலர்களை கொட்டி சிலை வாங்கிய வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் சுதாரித்துக்கொண்டு சுபாஷ் மீது வழக்குத் தொடுக்க ஆயத்தமாகியுள்ளன.
கபூருக்கு உதவிய சஞ்சீவி
கேரள பூர்வீகத்தோடு தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருந்த சஞ்சீவி அசோகன் தொடர்பு கிடைத்ததும் கபூரின் கனவு நனவானது. அரியலூர் கிராம கோவில்களில் இருந்து சஞ்சீவி மூலமாக அமெரிக்காவில் இருக்கும் கபூரின் கைக்கு ஐம்பொன் சிலைகள் சென்று சேரும். நிம்பஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் கபூர் ஆரம்பித்த ஏற்றுமதி நிறுவனம் மூலமாக தமிழகத்தின் கைவினைப்பொருட்கள் குவியலில் இந்த ஐம்பொன் சிலைகளும் பக்காவாக மறைத்து வைக்கப்பட்டு கடல் கடந்தன.
கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கடை செழித்தது. நிழல் வர்த்தகம் தந்த வருமானம், அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்து ஹாங்காங், துபாய், ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எல்லாம் கலைப்பொருள் விற்பனை என்ற பெயரில் கடை விரிக்க வைத்தது. மெய்நிகர் உலகத்திலும் கடைவிரிக்கும் ஆசையில் ஒரு இணையதளம் ஆரம்பித்தபோது, சர்வதேச மாஃபியாக்களை மோப்பமிடும் இன்டர்போல் மூக்கில் வேர்க்க வைத்தது.
கைமாறிய பணம்
இன்டர்போல் அறிவுறு த்தலில் கபூர் கடையும் கணக்குவழக்குகளையும் அமெரிக்க போலீஸார் ஆராய ஆரம்பித்தனர். அமெரிக்க கபூரின் கணக்கிலிருந்து சென்னை சஞ்சீவி அசோகன் கணக்குக்கு கோடிக்கணக்கில் பணம் போனதும் இன்டர்போல் சுதாரித்தது. இப்படியான வேட்டை தமிழக போலீஸாரை அரியலூரில் வந்து நிறுத்தியது.
சிலை கடத்தல் தொடர்பாக 2011 அக். 30-ல் சுபாஷ் கபூர் ஃபிராங்க்பர்ட்டில் கைதானார். தமிழக போலீஸார் ஜெர்மனி சென்று கபூரை அழைத்துவந்தனர். களத்தில் இறங்கிய தமிழக சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் கபூர் கைக்கு போன சிலைகளின் புள்ளி விவரத்தை சேகரிக்க ஆரம்பித்தனர்.
கபூர், சஞ்சீவி கணக்கில் வரவு வைத்த தொகைகள் மட்டுமே ரூ.1,16,37,694 மற்றும் 1,01,10,418 என தெரியவந்திருக்கிறது. அப்படியெனில் திருடப்பட்ட விக்கிரங்களை விற்ற வகையில் கபூர் பார்த்த கோடிகள் ஏராளம். தற்போதைய விசாரணையில் இருக்கும் சுத்தமல்லி ஸ்ரீபுரத்தான் சம்பவங்கள் 2008-ல் நடந்தது. அதற்கு முந்தைய கபூரின் சிலை கடத்தல் கண்ணிகளில் கை வைத்தால் எங்கெங்கோ வெடிக்கும் என்கிறார்கள்.
புராதன சிலைகள் பறிமுதல்
ஆனால் அமெரிக்காவில் கபூர் குடும்பம் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறது. அங்கு மேடிசன் அவென்யூ 89வது தெருவில் இருக்கும் கபூரின் கலைக்கூடத்தை நிர்வகித்து வந்த அவரது சகோதரி சுஷ்மா சரீன் மற்றும் மகள் மம்தா சாகரை மடக்கிய அந்நாட்டு போலீஸார் அவர்கள் மறைத்து வைத்திருந்ததாக 4 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இவற்றின் மதிப்பு சுமார் 14.3 மில்லியன் டாலர்களாம். கைப்பற்றபட்டவை அரியலூரின் சோழர்காலத்து புராதன சிலைகள் எனத் தெரிகிறது.
நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் சுபாஷ் கபூர் குடும்பத்தினர் தொடர்பான சிலைக் கடத்தல் வழக்கில், கபூரிடமிருந்து ஆறு சிலைகளை ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் அருங்காட்சியகம் வாங்கியிருக்கும் தகவல் வெளியானது. இதையடுத்து விருத்தாசலம் பகுதியிலிருந்து இருந்து கடத்தப்பட்டதாக சொல்லப்படும் அரத்தநாரீஸ்வரர் சிலை அருங்காட்சியக பார்வையிலிருந்து அதன் நிர்வாகம் அகற்றி இருக்கிறது. தொடர்ந்து மீதமுள்ள ஐந்து சிலைகளை அடையாளம் காணும் பணியையும் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சுபாஷ் கபூர் மற்றும் அவரது நிறுவனம் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.