இந்தியாவால் மட்டுமே இலங்கையை தனிமைப்படுத்த முடியும்: திருமாவளவன்

இந்தியாவால் மட்டுமே இலங்கையை தனிமைப்படுத்த முடியும்: திருமாவளவன்
Updated on
1 min read

காமன்வெல்த் மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியாவால் மட்டுமே, உலக அரங்கில் இலங்கையை தனிமைப்படுத்த முடியும் என்றார்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் திருமாவளவன் பேசும்போது, "இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய அரசின் சார்பில், பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க கூடாது.

தமிழக காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோர், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் நிச்சயம் பங்கேற்க மாட்டார் என நம்புகிறோம்.

பா.ஜ.க.,வும், காங்கிரசும் அரசியல் நடத்துகிறது. காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க., நெருக்கடி கொடுக்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என பா.ஜ.க., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர்கள், பிரதமர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தற்போது காங்கிரசும், பா.ஜ.க.,வும் தங்களது நிலையை தெளிவாக தெரிவிக்கவில்லை. மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றால், இரு நாடுகளுக்கிடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இந்தியா பங்கேற்றால், அது சர்வதேச அரங்கில், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது போல் விடும்.

இந்தியாவால் மட்டுமே, உலக அரங்கில் இலங்கையை தனிமைப்படுத்த முடியும். மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், ராஜபக்‌ஷேவை காமன்வெல்த் அமைப்பு நாடுகளுக்குத் தலைவராக்கி விடுவர். அவர் தலைவராகி விட்டால், இலங்கையின் போர்க்குற்றத்தின் மீது விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்படும்" என்றார் திருமாவளவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in