

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதியை கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. கொலையாளி யார் என போலீ ஸார் தொடர்ந்து தேடி வந்தனர். கடந்த 24-ம் தேதி முதல் போலீஸார் தனிப்படைகளுடன் தொடங்கிய அதிரடி வேட்டையில் நேற்று அதிகாலையில் நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) கொலையாளி எனத் தெரியவந்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணை குறித்து அவர்கள் தரப்பில் கூறியதாவது:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என கடந்த 24-ம் தேதி காலை 7.10 மணிக்கு ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, காலை 7.30 மணிக்கு ரயில்வே இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், 7.45 மணிக்கு ரயில்வே போலீஸ் டிஎஸ்பி சம்பவ இடத்துக்கு சென்றார். காலை 7.10 மணிக்கு சுவாதி இறந்துவிட்டதை 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.
காலை 7.40 மணிக்கே சுவாதி மேல் இருந்த அடையாள அட்டை எடுத்து, அவரது முகவரிக்கு சென்று பெற்றோருக்கும், உறவினருக்கும் தகவல் கொடுத்தோம். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினோம். இதையடுத்து, தடயவியல் துறையை சேர்ந்த நிபுணர்கள் அழைக்கப்பட்டு சுமார் ஒரு மணிநேரமாக முக்கிய தடயங்களை கண்டுபிடித்தனர். எந்த கோணத்தில் கொலையாளி வெட்டியிருக்க முடியும்? எந்த கோணத்தில் ரத்தம் சிந்தியுள்ளது, கொலையாளி எவ்வளவு தூரம் ஓடி வந்து இருக்கலாம் என பல்வேறு தடயங்களை கைப்பற்றினோம். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தி முக்கிய அடையாளங்களை சேகரித்தோம்.
கொலையாளி பயன்படுத்திய ஆயுதத்தை மதியம் 1 மணிக்கே கைப்பற்றினோம். இதில், கொலையாளியின் கைரேகையும் கண்டுபிடிக்கப்பட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்கு உள்ள 17 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில், 7 மட்டுமே முழு செயல்பாட்டில் இருந்தது. அதிலும் 3 சிசிடிவி கேமராக்களின் மூலம் கொலையாளி வந்து, சென்றது பதிவாகி இருந்தது. சந்தேகிக்கும் குற்றவாளியை, கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை வைத்து உறுதி செய்து கொண்டோம். பின்னர், சந்தேகிக்கும் குற்றவாளி என அவனின் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டோம். இதையடுத்து, 5 இன்ஸ்பெக்டர்கள், 2 டிஎஸ்பிக்கள் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.
டிஎஸ்பி தலைமையிலான குழு சுவாதி பணியாற்றிய ஐடி நிறுவனத்துக்கு சென்று சுவாதி பயன்படுத்தும் கணினி, மடி கணினியை முழுமையாக ஆய்வு செய்தோம். இதேபோல், பேஸ்புக், இமெயில் முகவரிகளிலும் முக்கிய தடயங்களை தேடினோம். சுவாதி படித்த கல்லூரி மற்றும் மைசூரில் பயிற்சி மையத்திலும் தனித்தனி குழுவினர் விசாரணை நடத்தினர். செல்போன் மூலம் குற்றவாளியை தேடும் பணியை மேற்கொண்டோம். பின்னர், கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் எந்த மாவட்டத்தை சேர்ந்தது, எதற்காக இதை பயன்படுத்துவார்கள் என இந்த கொலையின் விசாரணை தொடர்ந்து விரிவுப்படுத்த வேண்டியதாக இருந்தது. இதனால்தான் சுவாதி கொலை வழக்கு கடந்த 27-ம் தேதி மாநகர போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நடந்த ஒரு ஆண் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளோம். கடந்த ஆண்டு ஜோலார்பேட்டை அருகே ரயில் பெட்டியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.