

தமிழக அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், துறை சார்ந்த பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
இது தொடர்பாக நேற்று ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் பற்றாக்குறை, காலிப் பணியிடங்கள் தொடர்பாக கடந்த 5-ம் தேதி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில், தானாகவே முன்வந்து வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களில் 80 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளையே சிகிச்சைக்காக நம்பியுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி ஒரு லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய தமிழகத்தில் தற்போது 18 ஆயிரம் மருத்துவர்களே இருக்கின்றனர்.
மருத்துவர்கள் பற்றாக் குறையால் தினசரி நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். அறுவை சிகிச்சைக்காக பல மாதங்கள் காத்திருப்பதும், அது தொடர்பாக மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கிறது.
எனவே, தமிழகம் முழுவதும் எத்தனை மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் செயல் பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை என்ன, தற்போது காலியாக உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை எத்தனை என்பதை தெரிவிக்க வேண்டும்.
இதுதவிர, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை விஷயத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக 8 வாரங்களுக்குள் தமிழக தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர் மற்றும் தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.