

தமிழில் இருப்பது போன்ற செவ்விலக்கிய வளம் உலகின் மிகச் சில மொழிகளிலேயே இருக்கிறது. நமது பழந்தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, உரை மரபும் வளம் மிக்கது. செறிவான நமது உரை மரபு தற்போது மிகவும் தொய்வடைந்திருக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
பத்தாம் நூற்றாண்டிலேயே தமிழில் உரை மரபு தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் பலர் கருதுகிறார்கள். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள், நாலாயிர திவ்யபிரபந்தம் முதலான பக்தி இலக்கியம் பலவற்றுக்கும் உரைகள் வந்தன. 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் காலக் கறையானிடமிருந்து மீட்கப்பட்டதோடு அவற்றுக்கு உரைகளும் செய்யப்பட்டன.
உரையாசிரியர்களின் வேலை என்பது ஒருவகையில் நன்றி எதிர்பாராத வேலை. மூலநூல் வெளிவந்து வெகு காலம் ஆகிவிட்டபடியால் அதன் சமூக, இயற்கைப் பின்னணியும் சொற்களும் சமகால வாசகர்களுக்குப் புரியாமல் போய்விடக்கூடும் என்று கருதி அந்த இலக்கியங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சேர்த்தவர்கள் அவர்களே. மணக்குடவர், அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், பெரியவாச்சான் பிள்ளை முதலான உரையாசிரியர்களைக் கொண்ட வளமான பழம் மரபில் நவீன காலத்தில் உ.வே.சா., வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், ஔவை துரைசாமிப் பிள்ளை. தி.வே. கோபாலய்யர் என்று மேலும் பலரும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். நீண்ட பட்டியல் இது!
இந்த மரபு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரிதும் தொய்வடைந்ததற்கு சமூகவியல் சார்ந்த காரணங்களும் உண்டு. அதேபோல, பழந்தமிழ் இலக்கியத்துக்கும் தற்காலச் சமூகத்துக்கும் பாலம் ஏற்படுத்தாமல் பாடத்திட்டத்தில் வெறும் அடையாள அளவில் அந்த இலக்கியங்களைச் சேர்த்தது நன்மை பயக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதன் பொருள், பாடத்திட்டத்தில் பழந்தமிழ் இலக்கியங்களின் சுவையைத் தற்கால மாணவர்கள் உணரும்படிச் செய்யவில்லை என்பதே.
தமிழ் குறித்த நமது பெருமிதத்துக்கு இந்த இலக்கியங்கள்தான் அடிப்படைக் காரணம் என்பதை இன்றைய தலைமுறை உணர வேண்டும். இதற்கு, அந்த இலக்கியங்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பாலம்போல் செயல்படுவோர் வேண்டும். ஆகவே, புதிய சமூகநிலைகள், மாறிவரும் மொழியின் தன்மை இவற்றுக்கேற்ப, பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகளும் அறிமுகங்களும் செய்யப்படுவது அவசியம். நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் சிலருக்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் உண்டு. அவர்கள் இதை ஒரு முக்கியமான கடமையாகக் கருதி எளிய உரைகளையும் அறிமுகங்களையும் செய்வார்களென்றால் நம் மரபுக்கும் தற்காலத்துக்கும் இடையில் உறுதியான ஒரு பிணைப்பு ஏற்படும்!