விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மமக ஆதரவு

விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மமக ஆதரவு
Updated on
1 min read

ஏப்ரல் 3-ம் தேதி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் சென்ற ஆண்டு போதிய அளவில் பருவ மழை பொழியாததாலும், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு சரியான அளவில் கர்நாடக அரசு திறந்துவிடாத காரணத்தாலும், தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள டெல்டா விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கும் போது விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், கேரளா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் பவானி, காவிரி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க கோரியும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கக் கோரியும், மத்திய அரசுக்கு தமிழக விவசாய சங்கங்களின் சார்பில் பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், மத்திய பாஜக அரசு இக்கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய காரணத்தால் வரும் ஏப்ரல் 3-ல் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

விவசாயிகள் வாழ்வுரிமை தொடர்பான இந்தப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் விவசாய சங்கங்கள் நடத்தும் போராட்டங்களில் முழுமையாகப் பங்குகொள்ளும்படி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in