

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 72 ஏக்கரிலுள்ள தோட்டம், தற்போது 197 பரப்பளவில் பிரமாண்டமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. காய்கறி சாகுபடியுடன் மூலிகைத் தோட்டமும் அமைகிறது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் கடந்த 1865-ம் ஆண்டு 289.10 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயர்களால் மத்திய சிறை கட்டப்பட்டது. இங்கு ஒரே சமயத்தில் 2,517 கைதிகளை அடைக்கும் வகையிலான உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய பிரதான கட்டிடம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முகாம் சிறை, சிறப்பு முகாம், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குடியிருப்பு, காவலர் பயிற்சி மைதானம் உள்ளிட்டவை பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.
இவற்றுக்கான நிலங்கள் போக புதர் மண்டியிருந்த காலியிடங்களில் இதுவரை 72 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு நெல், கரும்பு, வாழை, சவுக்கு, தென்னை மற்றும் காய்கறி வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மீதமுள்ள 125 ஏக்கர் நிலத்தையும் சுத்தம் செய்து தோட்டத்தை விரிவுபடுத்த சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அங்கிருந்த முள்செடிகள், புதர்கள் அகற்றப்பட்டதையடுத்து டிராக்டர்கள் உதவியுடன் நிலத்தை உழுது பண்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், விவசாய பயன்பாட்டுக்கு தயார்படுத்தப்பட்ட நிலங்களில் தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட விதைகளை ஊன்றும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் கூறியபோது, “தமிழகத்திலுள்ள மற்ற சிறைகளைவிட திருச்சி மத்திய சிறை வளாகத்தில்தான் அதிக காலியிடம் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக் கருவேல மரங்கள் அண்மையில் அகற்றப்பட்டதையடுத்து, அந்த இடங்களில் செடிகளை நட்டு, தோட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். தற்போது புதிதாக உருவாக்கப்படும் தோட்டத்தில் 4 ஏக்கரில் முந்திரி, 2 ஏக்கரில் எள், 2 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட உள்ளது.
இதுதவிர மா, பலா, கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்றவற்றையும் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட உள்ளோம். ரோஜா, சாமந்திப்பூ, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செம்பருத்தி உள்ளிட்ட மலர்ச் செடிகளும் பயிரிடப்பட உள்ளன.
இதுதவிர சிறையைச் சுற்றி பசுமைப் போர்வையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேம்பு, புங்கை, அரசமரம், பூவசரம், நீர் மருது, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களும் அதிகளவில் நட்டு வளர்க்கப்பட உள்ளன. மேலும் சிறை எல்லை முடியக்கூடிய இடங்களில், சுற்றிலும் நூற்றுக்கணக்கான பனைமரங்களை வரிசையாக நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.
மூலிகைத் தோட்டம்…
அத்துடன் நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி இங்கு மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. மிக விரைவில் அதற்கான பணிகளும் தொடங்கும். புதிதாக 4 இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து அதன்மூலம் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றவுடன், சிறை வளாகம் நிச்சயம் நந்தவனம்போல காட்சியளிக்கும்” என்றார்.
மரக்கன்று, விதைகள் கொடுத்து உதவலாம்
மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் மேலும் கூறும்போது, “சிறை வளாகத்தில் பெரிய அளவில் அமைக்கப்படும் இந்த தோட்டத்துக்கு அரசுத் துறைகளிடமும், தனியார் அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்கிறோம். விருப்பமுள்ளவர்கள் மரக்கன்றுகள், செடிகள், விதைகள், கம்பி வேலிகள் போன்றவற்றை சிறை நிர்வாகத்துக்கு கொடுத்து உதவலாம்” என்றார்.