

பட்ஜெட் குறித்த அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்களின் சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலுரையில் விளக்கம் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், ''நிதி நிலை அறிக்கை விவாதத்துக்கு பதிலளித்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேரவையில், ஜெயலலிதா பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி என்று சொல்லியிருக்கிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி அல்ல. 1 . 1 சதவிகித வெற்றி. அதாவது திமுக அணிக்கும் - அதிமுக அணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் அவ்வளவுதான். அதிமுகவினர் உட்பட யாரும் எதிர்பாராத வெற்றி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
பதில் உரையில் பாதி, 'அம்மா' பாராட்டுப் புராணம்தான்! மொத்தம் 52 பக்க பதில் உரையில், பாதி பதில் உரையில் எண்ணிப் பார்க்கத்தக்கது என்று ஒன்றுமே இல்லை. தமிழக அரசின் 22 துறைகளுக்கு இந்த நிதி நிலை அறிக்கையிலே ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். அதையாவது நிதியமைச்சர் ஒழுங்காகத் தெரிவித்திருக்கிறாரா என்றால் இல்லை. அமைச்சர் தனது பதிலில், 'இந்த நிதி ஆண்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்காக மாண்புமிகு அம்மா அவர்கள் ஒதுக்கீடு செய்த தொகை ரூபாய் 121 கோடியே 69 லட்சம்' என்று 29-7-2016 அன்று படித்திருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன? அதே அமைச்சர் 21-7-2016 அன்று நிதி நிலை அறிக்கையிலே படித்த புள்ளி விவரம் என்ன தெரியுமா? கால்நடை பராமரிப்புத் துறைக்காக மட்டும் 1,188.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பத்தி 43இல் படித்திருக்கிறார்.
அதைத்தவிர பால்வளத் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் வேறு இருக்கின்றன. அமைச்சரின் பதில் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமே போதும் என்று கருதுகிறேன்.
ஏற்கெனவே நிதி நிலை அறிக்கையிலேயே ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறிய பிறகு, அதே தகவலை, ஜெயலலிதாவைப் பற்றி 26 பக்கப் பாராட்டுரைகளோடு இணைத்து, மீண்டும் அவையிலே ஒரு நிதியமைச்சர் படித்திருக்கிறார் என்றால், இதற்குப் பெயர்தான் பட்ஜெட் விவாதத்திற்கான பதில் உரையா?
பதில் சொல்லப் பெரிதாகவோ, புதியதாகவோ எதுவும் இல்லை என்பதால், ஏற்கனவே கொடுத்த புள்ளி விபரங்களையே மீண்டும் புரட்டிப் படித்து நேரத்தைப் போக்கியிருக்கிறார். இதனால்தானோ என்னவோ, நிதியமைச்சரின் முதல் 26 பக்க பதிலுரையை அரசின் சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தில் அனுப்பியிருப்பதில், ஒரு வரி கூட இடம் பெறவில்லை என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அமைச்சரின் பதிலுரையின் இரண்டாவது பகுதி 26 பக்கம். அந்தப் பகுதியை அவர்களுடைய கட்சியின் அதிகாரபூர்வமான ஏடே வெளியிடவில்லை. அதிலிருந்தே அந்தப் பேச்சின் தன்மையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
'கடந்த இரண்டாண்டுகளில் நமது கணிப்புகளுக்கும், கணக்குக்கும் ஏற்பட்ட வேறுபாடு, இத்தகைய நிகழ்வுகளால்தான் ஏற்பட்டதே தவிர, இதில் execution problem எதுவும் இல்லை' என்று அமைச்சரே தனது பதில் உரையில் ஒப்புதல் வாக்குமூலமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இடைக்கால நிதி நிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 9,154.78 கோடி ரூபாயாக இருக்கும் என்று இந்த ஆண்டு பிப்ரவரி திங்களில் சொன்னார்கள். 2016-2017ஆம் ஆண்டு திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய்ப் பற்றாக்குறை 15,854.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐந்து மாதங்களிலேயே இந்த வருவாய்ப் பற்றாக்குறை 6,699.69 கோடி ரூபாய் அதிகமாகி உள்ளது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், 'வருவாய்ப் பற்றாக்குறை குறைய வேண்டுமெனில், ஒன்று வருவாய் வரவு உயர வேண்டும் அல்லது வருவாய்ச் செலவினம் குறைக்கப்பட வேண்டும்' என்ற ஐன்ஸ்டின் கண்டுபிடிப்பை இவர் கண்டுபிடித்துப் பேரவையில் சொல்லி நகைச்சுவை விருந்து அளித்திருக்கிறார்.
வருவாய் 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகக் கிடைத்திருந்து, மாநிலக் கூடுதல் செலவு 2,600 கோடி ரூபாய் குறைந்திருந்தால், 2015-2016ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறைக்குப் பதில், வருவாய் உபரியாக இருந்திருக்கும் என்று விளக்கமளிக்கிறார்.
வருவாயை ஏன் பெருக்கவில்லை? செலவை ஏன் கட்டுக்குள் கொண்டு வரவில்லை? வருவாய்ப் பற்றாக்குறை அதிகமானது ஏன்? என்பதுதான் கேள்வி. அதைச் செய்யாததுதான் அதிமுக அரசின் நிதி மேலாண்மைக் குறைபாடு.
நிதிப் பற்றாக்குறை பற்றியும் அமைச்சர் பதிலளித்திருக்கிறார். வருவாய்ப் பற்றாக்குறை உயரும்போது, நிதிப் பற்றாக்குறையும் உயரும். ஆனால் அது மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தனக்குத்தானே நொண்டிச் சமாதானம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார்.
மூன்று சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு? ஏன் அதை நிதியமைச்சர் கூறவில்லை?
2016-2017ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ. 36,740.11 கோடி ரூபாயாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டது, தற்போது இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் 40,533.84 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவிகிதமாக இருந்தது, தற்போது 2.96 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நமது மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையின் அளவு 2.96 சதவிகிதம் என்றால், வரையறுக்கப்பட்ட அளவைவிட 0.04 சதவிகிதம்தான் இப்போது குறைவு. இதைத்தான் நிதியமைச்சர், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லிக் கொள்கிறார். இந்த அளவுதான் அடுத்த ஆண்டு 3.34 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டு விட்டு, அதையும் நிதி நிலை அறிக்கையிலே தெரிவித்து விட்டு, தற்போது நிதித் துறை அமைச்சர், கழுத்தை நெரித்திடப் போகும் அந்த சதவிகிதம் - வெறும் கணிப்புதான் என்று சமாளிக்கப் பார்க்கிறார்.
அடுத்த ஆண்டு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியங்களை உயர்த்திக் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் செலவினம் அதிகமாகும் போது நிதி மேலாண்மைக்காக வரையறுக்கப்பட்ட 3 சதவிகி தம் என்பது நிச்சயமாக 3.34 சதவிகிதத்தை எட்டும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
எனவே நிதித் துறை அதிகாரிகள் 3.34 சதவிகிதம் என்று மதிப்பிட்டிருப்பதை, வெறும் கணிப்பு என்று சொல்லி, இப்போது யாரையும் ஏமாற்ற முயல வேண்டாம். சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்; பலரைச் சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 'தற்போது உள்ள கடன் அளவு இன்றுள்ள சூழலில் இயல்பான ஒன்றுதான் என்றும், அளவுகோல்படி அதிகமாக இல்லை என்றும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமது மாநிலத்தின் கடன் அளவு கட்டுக்குள்தான் உள்ளது' என்றும் 25-7-2016 அன்றும் 29-7-2016 அன்றும் பேரவையில் எடுத்து விளக்கினார்.
ஆனால் திமுக ஆட்சியில், அதற்கு முன்பு திரண்ட கடனாக, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருந்த போது, ஆளுநர் உரையில் பேசிய ஜெயலலிதா, 'தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; ஒவ்வொரு குழந்தை தமிழ்நாட்டில் பிறக்கும் போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது' என்று திமுக அரசைக் குற்றஞ்சாட்டினார்.
90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தபோதே அந்த நிலை என்றால், இப்போது 2.52 இலட்சம் கோடி கடன் இருக்கிறதே, அது மட்டும் கட்டுக்குள் அடங்கியிருக்கின்ற கடனா? அல்லது தமிழக மக்களைக் கசக்கிப் பிழிந்து காவு கேட்கும் கடனா?
2015-2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டப்படி, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை பற்றி துரைமுருகனும், எ.வ.வேலுவும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் பற்றி இரண்டு ஆங்கில ஏடுகள் எழுதியிருந்ததை தாங்கள் பேசும்போது சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதற்குப் பதில் கூற முனைந்த நிதியமைச்சர், ஒரு ஆங்கில நாளேடு அந்தப் புள்ளி விவரத்தைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையைவிட மராட்டிய மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை திருத்த மதிப்பீட்டில் உயர்த்தப்பட்டு விட்டது. எனவே தமிழகத்தை விட மராட்டிய மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை அதிகம் என்று பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 31,830 கோடி ரூபாய், உத்தரப்பிரதேசத்தின் பற்றாக்குறை 31,560 கோடி ரூபாய், மூன்றாவதாகத்தான் மகாராஷ்டிரா, அங்கே 30,730 கோடி ரூபாய் பற்றாக்குறை. இதிலேதான் நிதியமைச்சர், திருத்த மதிப்பீட்டில் மகாராஷ்டிராவில் நிதிப் பற்றாக்குறை 37,949 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை திருத்த மதிப்பீட்டில் 32,360 கோடி ரூபாய் மட்டுமே என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார்.
அதாவது நிதியமைச்சர் நிதிப் பற்றாக்குறையில் முதல் மாநிலம் மகாராஷ்டிரம்தான், அடுத்ததுதான் தமிழ்நாடு என்று பெருமைப்பட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நிதிப் பற்றாக்குறையில் மகாராஷ்டிரா மாநிலத்தை விட குறைவு என்றாலும், மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தை விட அதிக நிதிப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டிய புள்ளி விவரத்தை அமைச்சரால் மறுக்க முடியாது அல்லவா?
இந்து ஆங்கில நாளிதழ், 'அதிகரித்து வரும் நிதி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறைகள் கவலைக்குரியது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்' என்று எழுதியிருக்கிறதே, அதற்கு அமைச்சரின் பதில் என்ன? சங்கடமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், சாதகமான ஒன்றிரண்டு விபரங்களை வைத்துக் கொண்டு சமாதானம் அடைவதேன்?
மேலும் நிதியமைச்சர், 'மூலதனப் பணிகளுக்கு நிதி போதுமானதாக இல்லாத காரணத்தால்தான், நாம் கடன் பெற வேண்டியுள்ளது. நமது மாநிலம் சந்திக்கின்ற இதுபோன்ற நிலை, பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இல்லை. அவற்றுக்கு அதிக அளவில், மத்திய அரசால் நிதி வழங்கப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் வருவாய் உபரியும் இருக்கிறது. அவை அதிக வரியையும் விதிப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்.
பிஹார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசால் அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறுவது, ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. பிஹார் ஆட்சியும், உ.பி. ஆட்சியும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிரானவை; எதிரான ஆட்சிகள் அதிக நிதியைப் பெற முடிகிற போது, மத்திய பாஜகவுக்கு நேசமான ஆட்சியினால் அதிக நிதியைப் பெற முடியாமல் போனது ஏன்?
மத்திய அரசுடன் கடுமையாக வாதாடி அதிக அளவில் நிதியைப் பெற முடியவில்லையா? அதிக நிதி கேட்டு, முதல்வர் எத்தனை முறை டெல்லிக்குப் படை எடுத்தார்? சென்னையிலே முதல்வர் வீட்டிற்கே பிரதமர் வந்தாரே, நிதி அமைச்சர் வந்தாரே, பிஹார், உத்தரப் பிரதேசம் மாநிலங்களைப் போல எங்களுக்கும் அதிக அளவில் நிதி வேண்டுமென்று நெருக்கடி கொடுக்கும் வகையில், கடுமையாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?
மத்திய நிதி அமைச்சரை, தமிழக நிதியமைச்சர் எத்தனை முறை சென்று சந்தித்தார்? இதுதான் எதிர்க் கட்சிகளின் கேள்வி. இதற்குத்தான் நிதியமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, பரிதாபமாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற் காக அல்ல! 'பலமுறை படை எடுத்தோம்; பாரதிரப் போராடினோம்; பலமாக வாதாடினோம்; நிதியைப் பெற்றோம்!' என்ற பதிலைத்தான் எதிர்க் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
நிதியமைச்சரின் பதில் உரை, திமுகவைச் சேர்ந்த பி.டி.ஆர்.பி. தியாகராஜனின் விரிவான, ஆய்வு ரீதியான உரைக்கு அளிக்கப்பட்ட பதிலாகத்தான் தெரிந்தது. நிதி நிலை அறிக்கை பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள் தெரிவித்த குறைபாடுகள் பற்றி எந்தப் பதிலும் அளிக்கப்பட வில்லை'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.