சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்
Updated on
1 min read

சென்னையில் ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னையில் வண்ணாரப் பேட்டை - விமான நிலையம் (24 கி.மீ.), சென்ட்ரல் பரங்கிமலை (22 கி.மீ.) என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்கின்றன. சுரங்கப்பாதை, உயர்த்தப்பட்ட பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தற்போது, முதல் வழித்தடத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது. அடுத்தகட்டமாக, சின்னமலை - விமான நிலையம், ஆலந்தூர் - பரங்கிமலை இடையே உயர்த்தப்பட்ட பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கப்பாதை பணிகளும் விரைவாக நடக்கின்றன.

இந்நிலையில், வண்ணாரப் பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, முதல் வழித்தடத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப் பணிகள் முடிக்கப் பட்டது. தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டது. ரூ.3,770 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த ஜூன் 1-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது. இதில் மத்திய அரசு ரூ.713 கோடியை ஒதுக்குகிறது. தமிழக அரசு ரூ.916 கோடி வழங்குகிறது. ரூ.2,141 கோடி கடன் திரட்ட திட்டமிடப்பட்டுள் ளது.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9.051 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் பாதையில் 8 ரயில் நிலையங்கள் அமை கின்றன. இதில், 2 கி.மீ. சுரங்கப் பாதையில் செல்கிறது. சுரங்கப் பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு, அப்கான்ஸ் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக் கான நில ஆர்ஜித பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயிலின் முதல் வழித்தட நீட்டிப்பு திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். தண்டையார்பேட்டை ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கில் காலை 11 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சியில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in