Published : 17 Feb 2015 04:26 PM
Last Updated : 17 Feb 2015 04:26 PM

விரைவில் சென்னை மெட்ரோ ரயில் சேவை: தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படுவது உள்ளிட்ட சில அறிவிப்புகள் தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றன.

தமிழக அரசின் செயல்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்ட இந்த உரையில், தமிழக மீனவர் பிரச்சினை, அகதிகள் விவகாரம், நதிநீர் சிக்கல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் நிலைப்பாடுகள் இடம்பெற்றன.

2015-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இதில் ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:

* கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவு செய்யும் என நான் நம்புகிறேன்.

* ஏழை - எளியோரின் நலனைக் காக்கவும், தேவையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மட்டுமன்றி, பரிவுணர்வோடு வடிவமைக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

மதநல்லிணக்கம் பேணுவதில் உறுதி

* சிறப்பாக பராமரிக்கப்படும் சட்டம் ஒழுங்கு, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். கட்டுப்பாடும், ஊக்கமும் நிறைந்த காவல்துறை மூலமாக, இந்த அரசு எப்போதும் பாகுபாடற்ற முறையில் சட்டத்தை நிலைநிறுத்தி, மாநிலத்தில் பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் பேணுவதை உறுதிசெய்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, சரியான காலத்தில் எடுக்கப்பட்ட திறன்மிக்க நடவடிக்கைகள் மூலமாக, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, மக்களுக்கு முழுப் பாதுகாப்பான உணர்வை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. விழிப்புணர்வோடு எடுக்கப்பட்ட சரியான தடுப்பு நடவடிக்கைககள் மூலமாக, தமிழகத்தில் 3 ஊடுருவ முயன்ற தீவிரவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

அகதிகள் விவகாரம்

* தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்திட, தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 42.23 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது உள்ளிட்ட தமிழ்மொழியை வளர்க்க பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

* உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, தமிழகத்தில் வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் தமது வாழ்வாதாரத்திற்காக அமைதியாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்.

இலங்கையில் தூக்கு தண்டனையை எதிர்கொண்டிருந்த ஐந்து மீனவர்களை விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதிசெய்திட அம்மீனவர்களின் 6 வழக்குச் செலவுகள், அவர்கள் சிறையில் இருந்தகாலத்தில் அவர்களது குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி வழங்கியதுடன் அவர்கள் புதிய வாழ்வைத் தொடங்குவதற்கான நிதியுதவியையும் வழங்கி இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை நான் மனமார பாராட்டுகின்றேன்.

கச்சத் தீவு மீதான இந்தியாவின் உரிமையை மீண்டும் நிலைநாட்டி, பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநிறுத்துவதன் மூலமாக மட்டுமே, நமது மீனவர்கள் தொடர்ந்து சந்தித்துவரும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற தனது நிலைப்பாட்டினை இந்த அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு

மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகளில் நமது மாநிலத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதில், தளராமுயற்சிகளையும் அயரா போராட்டங்களையும் மேற்கொண்ட ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவரது தொடர் முயற்சி மற்றும் மனோதிடத்தால் மட்டுமே, முல்லைப் பெரியாறு அணை, நீரியல் அடிப்படையிலும், கட்டுமான அடிப்படையிலும், நிலநடுக்க சாத்தியக்கூறு அடிப்படையிலும், பாதுகாப்பாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை நமது மாநிலம் பெற்று, அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்த முடிந்தது.

புதிய அணைகளுக்கு எதிர்ப்பு

* முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை அமைப்பதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்வதற்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து தனது கடும் எதிர்ப்பை இந்த அரசு மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

இதுபோன்றே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மீறி பாம்பாறு உப வடிநிலப் பகுதியில் புதிய நீர்தேக்கத் திட்டங்களைச் செயல்படுத்த உத்தேசித்துள்ள கேரள அரசின் நடவடிக்கை குறித்த தமிழகத்தின் நியாயமான கவலைகளும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய எந்த ஒரு புதிய திட்டமும் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலையும், பாசன உரிமை பெற்ற அனைத்து மாநிலங்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும்.

* குடிநீர்த் தேவை என்ற போர்வையில் தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது என்ற இடத்திற்கு அருகில் காவேரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓர் இடைக்கால மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டம் தேவை

* மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் இந்தியாவின் இறையாண்மைக்கே ஊறு விளைவிப்பதாக உள்ளன. தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைந்து தேசிய ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது.

* பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு முன்னதாக ஒருமித்த கருத்தை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும் என்றும், இத்தகைய முக்கியமான சட்டத்தை அவசரமாக நிறைவேற்றிடக் கூடாது எனவும் தமிழக அரசு வலியுறுத்துகிறது.

மின்னணு சேவை

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், வரிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் செலுத்துதல், பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பயன்களைப் பெறுவதற்கான படிவங்களை அளித்தல் உள்ளிட்ட பல சேவைகளை இணையம் மூலமாக பொதுச் சேவை மையங்களில் மக்கள் எளிதாக பெற்று வருகின்றனர்.

மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்குவதில் நமது நாட்டிலேயே முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. முதலிடத்தை நமது மாநிலம் விரைவில் அடையும் என நம்புகிறேன்.

* மக்களுக்கு பொதுச் சேவைகளை வழங்கும் 200 பொதுச் சேவை மையங்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்துள்ளது. கிராம மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் கூடுதல் பொதுச் சேவை மையங்களை அமைத்து, மேலும் பல பகுதிகளிலும் இச்சேவைகளை இந்நிறுவனம் விரிவுபடுத்தும்.

* தற்போதைய காலச் சூழலுக்கு ஒவ்வாத மத்திய திட்டக்குழுவை கலைத்து, இந்தியாவை மாற்றி அமைப்பதற்கான தேசிய அமைப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் முடிவை இந்த அரசு வரவேற்கிறது.

* நில ஆவணங்களை கணினிமயமாக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, சென்னை நகர மக்கள் கணினிமயமாக்கப்பட்ட பட்டாக்களை இணையம் மூலமாக பொதுச் சேவை மையங்களில் பெறலாம். தற்போது நடைபெற்றுவரும் நத்தம் மற்றும் நகர்ப்புர நில அளவைப் பணிகள் முடிவுற்ற பின்னர் இத்தகைய பலன்கள் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும்.

உணவு தானிய உற்பத்தி

* அரசு எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக 2013-2014 ஆம் ஆண்டில் நமது மாநிலத்தின் வரலாற்றில் 110.02 இலட்சம் மெட்ரிக் டன் அளவு உணவு தானிய உற்பத்தி என்ற மிக உயரளவை எட்டியது பெருமிதத்துக்குரியது. 2013-2014 ஆம் ஆண்டில் 6.14 இலட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனை அளவுக்கு பயறுகள் உற்பத்தி செய்ததற்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை நமது மாநிலம் பெற்றுள்ளது.

* விலையில்லா கறவை பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் முன்னோடித் திட்டத்தின் கீழ் இதுவரை 47,735 கறவைப் பசுக்களும், 21.91 லட்சம் வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

அம்மா சிமென்ட் சாதனை!

வெளிச் சந்தையில் சிமென்ட் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவுகளைச் சார்ந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில், 5.1.2015 முதல், மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற சலுகை விலையில் சிமென்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் திட்டத்தை தொடங்கியிருப்பது இந்த அரசின் மேலும் ஒரு சாதனையாகும்.

* கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. 2011 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை 2,930 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் என்ற புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் 4,680 கோடி ரூபாய் செலவில் 2.4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள் 18,302 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் பெறுவதற்கு இந்த அரசு உறுதுணையாக இருந்துள்ளது.

* மாநிலத்தில் உள்ள நகர்ப்புர பகுதிகளில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திட, ஆண்டுதோறும் 750 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நகர்ப்பு வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை இந்த அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

* சென்னை மாநகரத்தின் குறிப்பிட்டத் தேவைகளை நிறைவு செய்ய ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சென்னை பெருநகர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* 12 மாநகராட்சிகளை ‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தின் கீழ் சேர்க்கக் கோரியுள்ள இந்த அரசின் கோரிக்கையை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என நான் நம்புகிறேன்.

குடிநீர்த் திட்டங்கள்

* ஒரு மாநகராட்சிக்கும், 18 நகராட்சிகளுக்கும், 84 பேரூராட்சிகளுக்கும், 13,068 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கும் பயனளிக்கக்கூடிய 14 பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் 4,890 கோடி ரூபாய் செலவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புர மறுசீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 19,928 குடியிருப்புகளை கட்டி முடிப்பதற்காக 2014-2015 ஆம் ஆண்டில் மாநில அரசு நிதியிலிருந்து கூடுதலாக 406.31 கோடி ரூபாய் நிதியை இந்த அரசு ஒதுக்கியுள்ளது.

விரைவில் சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படும். வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை விரைவில் வழங்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கவும், சென்னை மாநகர மக்களுக்கு மேலும் பயன்தரச் செய்யவும், இந்த கூடுதல் வழித்தடத் திட்டங்களை செயல்படுத்திட மாநில அரசுக்கு மத்திய அரசு உதவும் என நான் நம்புகிறேன்.

மின் நிலைமை மேம்படும்

மாநிலத்தின் மின் கடத்தும் கட்டமைப்பை வலுப்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி நிறுவனத்திடமிருந்து 3,572 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று செயல்படுத்தப்படும் திட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மாநிலத்தின் மின் விநியோக நிலையை மேம்படுத்தும்.

சாலைக் கட்டமைப்பு

* ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக 10,637 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணிவாக்கத்திலிருந்து நெமிலிச்சேரி வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் முதல் கட்டப் பணிகள் நிறைவுற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, நெமிலிச்சேரியிலிருந்து தச்சூர் வரையிலான இரண்டாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலீடுகளைப் பெறுவதில் முன்னிலை

* 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 2,58,382 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்து, தமிழகம் நமது நாட்டில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில், 44,402 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை நமது மாநிலம் ஈர்த்துள்ளது.

மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் புள்ளி விவரங்களின்படி, வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

ஆசியாவில் முதலீடுகளுக்கு உகந்த மூன்று தலைசிறந்த இடங்களில் ஒன்றாகவும், நமது நாட்டில் மிகச் சிறந்ததாகவும் நமது மாநிலத்தை உருவாக்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆம் நாட்களில் சென்னையில் நடைபெற இருக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு உதவும்.

* நமது மாநிலத்தில் 9.68 இலட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் அலகுகளைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, 63.18 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

கல்வித் துறை செயல்பாடுகள்

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. மேலும், இணையவழி வகுப்புகள் கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்போன்ற புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கல்வித் தரத்திற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது.

* தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த அரசு ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல், இதுவரை 72,597 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

* மடிக்கணினிகள், இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்து பயணச் சலுகை அட்டைகள், மிதி வண்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 2014-2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8,748.89 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது.

* தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

சேர்க்கை விகிதம் உயர்வு

* கடந்த நான்கு ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 11 பல்தொழில்நுட்பவியல் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு தொடங்கியுள்ளது. இதேபோன்று, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 2013-2014 ஆம் ஆண்டுவரை 1,800 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 10,204 மாணவர்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.

* உயர் கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாக உள்ள போதிலும் தமிழ்நாட்டில் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

* கடந்த நான்கு ஆண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதோடு, 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் நவீன கருவிகளோடு கூடிய மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

* நடந்து முடிந்த 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் 33 போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 7 விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த 12 விளையாட்டு வீரர்கள் 5 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பான ஊக்கத் தொகை பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

* சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் சத்துச் செறிவினை மேம்படுத்தும் வகையில், ஆண்டிற்கு 103.28 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பல்வகை உணவு வகைகள் வழங்குவதை இந்த அரசு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.

* உயர் கல்விக்கான உதவித் தொகையை தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்கியது இந்த அரசின் முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும்.

* வரவிருக்கும் கூட்டத் தொடரில் மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்து, தொலைநோக்குத் திட்டம் 2023-ல் திட்டமிடப்பட்டவாறு உயர் வளர்ச்சியை எட்டத் தேவையான மேலும் பல முன்முயற்சிகளை இந்த பேரவை எடுக்கும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தனது உரையில் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x