

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற மாவட்டத் தலைவர்கள் தலைமையில் குழுக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
ஆளும் அதிமுக அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து திமுக போட்டியிடுகிறது.
ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் போட்டியிடும் இடங்களை முடிவு செய்து பட்டியல் அனுப்புமாறு திமுக மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற, கட்சி ரீதியாக உள்ள 61 மாவட்டங்களுக்கும் அந்தந்த மாவட்டத் தலைவர், மாவட்டப் பொறுப்பாளர் தலைமையில் தலா 4 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அணி களின் மாநிலத் தலைவர்கள், கடந்த மக் களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர் தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கள் இக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் - கன்னியாகுமரி மேற்கு, முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ் - வட சென்னை, பி.விஸ்வ நாதன் - மதுரை வடக்கு, கே.ராணி - மத்திய சென்னை, இளைஞரணித் தலைவர் விஜய் இளஞ்செழியன் - தென் சென்னை, முன்னாள் எம்.எல்.ஏ. டி.யசோதா (திருவள்ளூர் வடக்கு), எஸ்.சி. பிரிவுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை - காஞ்சிபுரம் வடக்கு, எஸ்.விஜயதரணி எம்.எல்.ஏ. - கன்னியாகுமரி கிழக்கு உள்ளிட்டோர் இக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
விருப்ப மனு கட்டணம்
விருப்ப மனுக்களுடன் மாநகராட்சி உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1,000, பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 50 சதவீத கட்டணம் செலுத்தினால் போதுமானது என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.