

ஆர்.கே.நகரில் வீடு, வீடாகச் செல்லும் திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷ், ‘உங்கள் கஷ்டங்களை நானும் அனுபவிக் கிறேன்’ எனக்கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நேற்று தண்டை யார்பேட்டை நேதாஜி நகருக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் புடைசூழ வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். திமுக எம்எல்ஏக்கள் மாசிலாமணி, மஸ்தான் உள்ளிட்டோரும் அவருடன் சென்றனர்.
அன்னை சத்யா நகரில் அவர் பிரச்சாரம் செய்யும்போது சுமதி என்ற பெண் அவரை வழிமறித்து, ‘‘நீங்கள் வெற்றிபெற்றால் எங்க ளுக்கு என்னென்ன செய்வீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார். வீட்டுத் திண்ணையில் அவருடன் அமர்ந்து பொறுமையாக பதில ளித்த மருதுகணேஷ், ‘‘நானும் உங்களைப் போல ஆர்.கே.நகர் தொகுதியிலேயே வசிப் பவன்தான். குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் தேங்குவது, குப்பை மேடுகள், போக்குவரத்து நெரிசல் என உங்களின் கஷ்டங்கள் அனைத்தையும் நானும் அனு பவித்து வருகிறேன். எனவே, நான் வெற்றி பெற்றால் பிரச்சினைகளை தீர்க்க பாடு படுவேன்’’ என உறுதி அளித்தார்.
இளைஞர்கள், மாணவர்களை சந்திக்கும்போது. “மூடிக்கிடக்கும் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க பாடுபடுவேன்” எனக்கூறி அவர் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் இடையை ‘தி இந்து’விடம் பேசிய மருதுகணேஷ், ‘‘செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் அவர்களில் ஒருவரான என்னை கண்டிப்பாக வெற்றி பெறச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்’’ என்றார்.