தமிழகத்தில் மழை குறையும்

தமிழகத்தில் மழை குறையும்
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை குறையும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் லேசான அல்லது மிதமான மழையே பெய்யக்கூடும்.

வங்கக் கடலில் உருவான மாதி புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் வியாழக்கிழமை தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து 11 செ.மீ வரை மழை பதிவானது. ஆனால் சனிக்கிழமை அதிக பட்சமாக குன்னூர், பரமத்தி வேலூரில் 4 செ.மீ மழை மட்டுமே பதிவாகியது. மேலும் கோத்தகிரி மற்றும் கொடைக்கானலில் 3 செ.மீ, நாமக்கல், பெரியகுளம், ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகியது.

தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் கடந்த சனிக்கிழமை வரை பதிவான மழை அளவில் 28% பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கக் கடலில் புதிதாக புயல் ஏதும் உருவாகாத நிலையில் இந்த பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் லேசான மழை பெய்யும். ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். அதிக பட்ச வெப்பநிலை 31 டிகிரியாகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரியாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in