

வாகனங்களுக்கு இலவசமாக பழுது நீக்கம் செய்யப்பம் முகாம்களுக்கு சென்றால், பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூல் செய்யப்படுகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாகியும் பல இடங்களில் மழை வெள்ளநீர் வடியாமல் இருக்கிறது. அந்த இடங்களில் கழிவு நீரும் சேர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகும் குட்டையாக மாறியுள்ளதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், அந்த கழிவுநீர் வடிவதற்கான நீர்வழிப்பாதைகள் இல்லை என்றும், அதனால் கழிவுநீர் அகற்றும் லாரிகள் மூலம் அந்த அசுத்த நீரை அகற்றவேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதிமுக அரசிடமிருந்து தாங்கள் வேறு எவ்வித உதவியும் கேட்கவில்லை, இதை செய்துகொடுத்தாலே போதுமென்று மனம் நொந்துபோய் கூறுகின்றனர். எனவே அதிமுக அரசு நீண்ட நாட்களாக நீர் வடியாமல் உள்ள இடங்களிலிருந்து லாரிகள் மூலம் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சாலைகள் குண்டும், குழியுமாக, ஜல்லிக்கற்களுமாக காட்சி அளிக்கின்றன. அதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொண்டு மிகுந்த சிரமப்படுகின்றனர். அதனால் ஒருசில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடிவதில்லை. மேலும் சாலைகளில் ஏற்படுகின்ற புழுதிகளால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, நடந்து செல்பவர்களும் கண் எரிச்சல், சுவாசக்கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு, பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க அதிமுக அரசோ, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய சாலைகள் அமைத்துள்ளதாகவும், அதற்காக எத்தனை பொறியாளர்கள், சாலை பணியாளர்கள் பணியாற்றினார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது. பொய்யும், புரட்டும் பேசி மக்களை ஏமாற்றாமல், போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். இன்னும் ஒருசில இடங்களில் மின்சார வசதி வழங்கப்படாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தி, மின்வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இலவசமாக பழுது நீக்கும் முகாம் நடத்தப்படுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதனடிப்படையில் அமைச்சர் தங்கமணி சிறப்பு முகாமை துவங்கி வைத்தார். ஒரு கட்டிங் பிளேயரையும், ஸ்பேனரையும் வைத்துக்கொண்டு பிரேக்கை சரிசெய்து கொடுப்பதற்கு பெயர் அரசு இலவச பழுது நீக்கும் முகாமா? ஏற்கனவே "நொந்து நூலாகிப்போயுள்ள" பாதிக்கப்பட்ட மக்களை வாகனப் பழுது நீக்கும் முகாம் மேலும் நோகடித்துள்ளது.
வாகனங்களுக்கு இலவசமாக பழுது நீக்கம் செய்யப்படுகிறதென முகாம்களுக்கு சென்றால், பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூல் செய்வதாகவும், வாகனங்களை பத்து நாட்களுக்குப் பிறகே திரும்ப பெறமுடியுமென கூறுவதாகவும், அரசு அறிவித்துள்ள முகாம்கள் தொலைதூரங்களில் இருப்பதாகவும் வாகன உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
இதுபோன்ற ஏமாற்று வித்தைகளை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அதிமுக அரசு செய்யுமென தெரியவில்லை. ஆட்சியின் அந்திம காலம் முடியும் வரையிலும் இதே நிலைதான் நீடிக்குமோ? அரசாங்கத்தை நம்பிய மக்களுக்கு கிடைப்பதென்னவோ ஏமாற்றம்தான். ஓட்டுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாமென்ற பகல் கனவுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற கண்துடைப்பு அறிவிப்புகளையும், வெற்று அறிவிப்புகளையும் ஒவ்வொரு நாளும் அறிவித்துக்கொண்டுள்ளார்.
அதனால் தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஆட்சியின் கடைசி காலத்திலாவது தமிழக மக்கள் மீது முதல்வர் ஜெயலலிதா அக்கறை செலுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.