Published : 16 Oct 2013 06:14 PM
Last Updated : 16 Oct 2013 06:14 PM

தீபாவளிக்கு 8,350 சிறப்புப் பேருந்துகள்: தமிழக அரசு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இம்மாதம் 29-ல் இருந்து நவம்பர் 1 வரை 8,350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 29.10.2013 அன்று 700 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 1000 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1200 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1400 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 4300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 29.10.2013 அன்று 634 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 950 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1256 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1210 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை 4050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்து 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 8350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதே போன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பேருந்துகள் நவம்பர் 2.11.2013 முதல் 5.11.2013 வரை இயக்கப்படும்.

300 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலம், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர, தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x