

காந்தியவாதி, கல்வியாளர், கொடையாளர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காந்தி ஜெயந்தி அன்று மறைந்தார். அவருக்கு வயது 91.
மூத்த தொழிலதிபரும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சிறந்த கொடையாளருமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் வியாழக்கிழமை மாரட்டைப்புக் காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 91.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. காந்தியவாதியான அவரது உயிர் காந்தி ஜெயந்தி நாளன்றே பிரிந்துள்ளது.
சக்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ், அண்ணாமலை பஸ் டிரான்ஸ்போர்ட் லிமிடெட் ஆகியனவற்றை அவர் நிர்வகித்து வந்தார். வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் திடீரென மயங்கி மேடையில் சரிந்து விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு மனைவி மூன்று மகன்கள் உள்ளனர். மகாத்மா காந்தியின் புத்தகங்களை தமிழில் பதிப்பித்துள்ளார்.
1923, மார்ச் 21-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் நா.மகாலிங்கம். சென்னை லயோலா கல்லூரியில் பயின்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டயப் படிப்பும் படித்தார். பின்நாளில், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
2007-ல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதினையும் அவர் பெற்றார். இரண்டு முறை மாநில திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1952, 1957, 1962 ஆகிய காலகட்டங்களில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய அவர் வெற்றியும் பெற்றார். பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் செயல்படுத்தப்பட பெரும் பங்கு வகித்தார்.
அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, " எளியவர்களிடமும் மரியாதையும், பரிவும் செலுத்தி வந்த அந்த மாமனிதர் மறைந்து விட்ட செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் குறிப்பாக அவருடைய அன்பு மகன் மாணிக்கத்திற்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "ஆரவாரம் இல்லாத அமைதி; எதையும் கணக்கறிந்து செய்யும் தெளிவு; நிதானத்தோடும் விவேகத்தோடும் வகை தெரிந்து வாழும் சீலம்; பழுதுபடாத உறுதிப்பாடு; சமய இலக்கியத் திருப்பணி; ஆழ்ந்த பக்தியில் தோய்ந்த பெருமகனார் மகாலிங்கம்’ என்று, நீதிபதி மகராசனால் போற்றப்பட்டவர்; தமிழ் மொழிக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் காந்திய நெறிகளுக்கும் அரணாக இருந்து போற்றத்தக்க நிறைவாழ்வு வாழ்ந்த அம்மாமனிதரின் மறைவு தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து துயரத்தில் பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காந்திய சிந்தனையாளர் நா.மகாலிங்கம் காந்தி பிறந்தநாள் அன்றே மறைந்திருக்கிறார். சமூக அக்கரையிலும், ஆன்மிக சிந்தனையிலும், காந்திய சிந்தனையிலும், தேசிய சிந்தனையிலும் ஆய்ந்த பற்று கொண்ட அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது தேசிய சிந்தனையை பின்பற்றுவது நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில், "பெரும் கொடையாளரும், மனிதநேயருமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மறைவு கல்வி, தொழில்துறை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும், காந்தியவாதிகள் மற்றும் வள்ளலார் கொள்கைகளை பின்பற்றுவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.