சென்னையில் ஒரு சில நாள்களில் மினி பஸ்

சென்னையில் ஒரு சில நாள்களில் மினி பஸ்
Updated on
1 min read

சென்னை மாநகர மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, கடந்த நான்கு ஆண்டுகளாக வரும்..வராது..என்று இழுபறியாக இருந்த, மினி பஸ் இன்னும் ஒரு சில நாள்களில் இயக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது, சென்னை மாநகரில் மினி பஸ்கள் இயக்கப்படும் என்று சட்டசபையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார். ஆனால் அது அறிவிப்பாகவே இருந்து வந்தது. அதன்பின்னர் 2011-ல் சட்டமன்ற தேர்தல் வந்தது. தி.மு.க. ஆட்சியை இழந்தது.

அந்த திட்டத்தை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்திருந்தது. ஆனால், சென்னை நகரில் உள்ள பஸ், ரயில் இணைப்பு இல்லாத தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் மினி பஸ்களை இயக்க தற்போதைய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து 100 மினி பஸ்கள் இயக்கப்படும் என்று கடந்த மே 2012-ல் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே டாட்டா நிறுவனத்திடம் இருந்து மினி பஸ் சேஸிஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் வாங்கி கரூரில் “பாடி” அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

அவற்றில் 25 பஸ்கள் தயார்நிலையில் இருப்பதாகவும், அவற்றின் இயக்கத்தினை முதல்வர் ஜெயலலிதா வரும் 23-ம் தேதி தொடங்கி வைப்பார் என்றும் அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in