படகுகளை விடுவிக்க நடவடிக்கை: சுப்பிரமணியன் சுவாமியிடம் மீனவர்கள் கோரிக்கை

படகுகளை விடுவிக்க நடவடிக்கை: சுப்பிரமணியன் சுவாமியிடம் மீனவர்கள் கோரிக்கை
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தங்களது விசைப் படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியிடம் ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து நான்கு மாத காலங்களில் 450-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 75 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை சாந்தோமிலுள்ள பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமியை ராமேசுவரம் மீனவ பிரநிதிகள் மெரிஸ்டன் மற்றும் ஞானசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில், ''தமிழகத்தில் விசைப்படகுகள் வைத்திருப்போர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்லர். இலங்கை கடற்படையினர் எங்களது விசைப்படகுகளை சிறைப்பிடித்து வைத்திருப்பபதால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமான படகுகள் இன்றி, மீன்பிடிக் குடும்பங்கள் நிராதரவாக இருக்கிறோம்.

மேலும், வடகிழக்குப் பருவமழை நெருங்கிவரும் நிலையில், சிறைப்பிடிக்கப்ப்ட்ட படகுகளை இலங்கை கடற்பகுதியில் திறந்த வெளியில் பராமரிப்பின்றி வைத்திருப்பதால் படகுகள் மூழ்கிடும் அபாயம் உள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன" என்று அவரிடம் மீனவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, மீனவர்களின் கோரிக்கைகளை பரீசிலிக்க மத்திய அரசிடமும், இலங்கை அரசிடம் வலியுறுத்துவேன் என்று ராமேசுவரம் மீனவர்களிடம் சுப்ரமணியன் சுவாமி உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின்போது பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் தேசிய பெண்கள் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தான் பேசியதாக குறிப்பிட்டார்.

அப்போது, எல்லை தாண்டிய காரணத்துக்காக கைது செய்யும் மீனவர்களை விடு வித்துவிடுமாறும், விசைப்படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்று கூறி படகுகளை சிறைப்பிடித்து வைத்துக் கொள்ளுமாறும் இலங்கை அரசிற்கு ஆலோசனை கூறியதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in