

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி திமுக சார்பில் அக்டோபர் 17-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா தொழிற்சாலை நவம்பர் 1-ம் தேதி முதல் மூடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இந்தியாவில் 93 கோடி கைபேசி உபயோகிப்பாளர்களின் தேவை களில் 60 சதவீதத்தை நோக்கியா நிறுவனம் நிறைவு செய்து வந்தது.
லாபகரமாக இயங்கி வந்த இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. நோக்கியா நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலா ளர்களாக 8,500 பேரும் பயிற்சி யாளர்களாக 6 ஆயிரம் பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்களாக 6 ஆயிரம் பேரும் பணியாற்றினர்.
இதன் சார்பு நிறுவனமான பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 7 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். இவர்களில் 6 ஆயிரம் பேரை விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேற்றிய நிலையில் அந்நிறுவனம் தற்போது நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவைச் செயலாளர் மு.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.