

அதிமுக செய்தித் தொடர்பாளரான நடிகை சி.ஆர்.சரஸ்வதி நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். ஆணையர் ஜார்ஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், செல்போனில் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தொலைபேசியில் சிலர் ஒருவாரமாக என்னை மிரட்டி நிம்மதியைக் கெடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் மிரட்டுகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்தும்
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டீர்களா? என தொலைபேசியில் கேள்வி எழுப்புகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர்.
எனக்கு மட்டுமின்றி எதிர்காலத் தில் பொதுவாழ்வில் ஈடுபடும் எந்தப் பெண்ணையும் இப்படி கேவலப்படுத்தக் கூடாது. மிரட்டல் வந்த தொலைபேசி எண்கள் உட்பட அனைத்து ஆதாரங் களையும் காவல்துறையிடம் கொடுத்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான பா.வளர்மதி, கோகுல இந்திரா வுக்கும் மிரட்டல்கள் வருகின்றன.
இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.