Published : 01 Mar 2014 01:27 PM
Last Updated : 01 Mar 2014 01:27 PM

7 பேர் விடுதலை விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை கூட்டம்

ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் கண்டன போராட்டத்தில் கலந்து கொள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "1991 மே 21-இல் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளியளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 23 ஆண்டுகள் சிறையில் அவதியுற்றனர்.

2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடி வதங்கினர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-ஆவது பிரிவின்கீழ் ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுவிக்கவும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து அதைத் தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அறிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

23 ஆண்டுகள் சிறைச்சாலையில் துன்புற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வது மனிதாபிமான நடவடிக்கை ஆகும். ஆனால், அத்தகைய மனிதநேய எண்ணமின்றி தமிழ்க்குல மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும் ஏழு தமிழர்களையும் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மார்ச் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மக்கள் பெருந்திரள் ஒன்றுகூடல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்றது.

அந்த நிகழ்ச்சியில் மனிதஉரிமை ஆர்வலர்களும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும், மாணவச் செல்வங்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்". இவ்வாறு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x