

சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடும் வகையில் கடல் வாணிப அமைச்சகத்தின் மூலம் விரைவில் தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட உள்ளது.
பண்டைய பாண்டியர் காலம் தொட்டு தனுஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறைமுகமாக விளங்கியது. மார்க்கோபோலோ போன்ற உலக புகழ்பெற்ற வரலாற்றுப் பயணிகள் தங்கள் பயணக்குறிப்புகளில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நடை பெற்ற முத்துக்குளித்தலை பற்றி பெருமையாக எழுதியுள்ளனர். தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னார், யாழ்ப்பாணம், கொழும் புக்கு தினசரி படகு போக்குவரத்துகள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடைபெற்றுவந்தன.
கப்பல், ரயில் போக்குவரத்து
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து-தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து, தலைமன்னாரில் இருந்து மீண்டும் கொழும்புக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கினர்.
மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனுஷ்கோடிக்கும் தலைமன்னா ருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 டிசம்பர் 17-ல் புயல் சின்னம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது. டிசம்பர் 19-ல் அது புயலாக உருவெடுத்து டிசம்பர் 22-ல் இலங்கையை கடந்து 280 கி.மீ. வேகத்தில் இரவு 11 மணிக்கு மேல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது.
அனைவரும் இறந்த சோகம்
புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச்சென்ற போட் மெயில் ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இன்ஜினின் இரும்பு சக்கரங்களை மட்டுமே. மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்த அனைவரும் புயலுக்கு பலியாயினர். தனுஷ் கோடியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களும் உயிரிழந்தனர்.
தனுஷ்கோடி துறைமுகம், படகுத்துறை, ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, மாரியம்மன் கோயில், தேவாலயம், இஸ்லாமியர்கள் அடக்கஸ்தலம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்கள் அனைத்தும் புயலின் தாண்டவத்தில் முற்றிலும் அழிந்துபோயின. புயலால் அழிந்த தனுஷ்கோடியை காணுவதற்கு இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதியிலில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
( மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் கலங்கரை விளக்கத்திற்காக சனிக்கிழமை ஆய்வு செய்தபோது எடுத்த படம்)
நினைவுச் சின்னங்கள்
சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் விதமாக தனுஷ்கோடி புயலின் போது சேதமடைந்து இன்று வரை உள்ள தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக் கூடம், இரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டடங்களை அதன் பழமை தன்மை மாறாமல் பராமாரித்து பாதுகாத்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத் துறையுடன் அனைத்துத் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையிலுள்ள கடல் வாணிப அமைச்சகத்தின் மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடும் வகையில் முகுந்தராயசத்திரம் அருகே புதிதாக கலங்கரை விளக்கம் அமைத்திட வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.நடராஜன் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே கலங்கரை விளக்கம் அமைப்பதற்கு தேவையான இடத்தினை சனிக்கிழமை ஆய்வு செய்தார். இடம் தேர்வுக்குப் பின்னர் கலங்கரை விளக்கம் கட்டுவதற்கான பணிகள் துவங்கும்.
* சென்னை தொடங்கி தென்குமரி வரையில் பழவேற்காடு, சென்னை மெரினா , மாமல்லபுரம் , பாண்டிச்சேரி ,பரங்கிப்பேட்டை, நாகப்பட்டிணம், கள்ளி மேடு, கோடியக்கரை, அம்மாபட்டிணம், பாசிப்பட்டிணம், பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை , பாண்டியன்தீவு (தூத்துக்குடி மாவட்டம்) மனப்பாடு, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட இடங்களில் பன்னெடுங்காலமாக கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
* இதில் ராமேசுவரம் தீவில் பாம்பன் மற்றும் பிசாசுமுனை ஆகியப் பகுதிகளில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன. மேலும் தனுஷ்கோடியில் புதியதாக கலங்கரை விளக்கம் அமைந்தால் மூன்று கலங்கரை விளக்கங்களை கொண்ட தீவு என்ற சிறப்பை ராமேசுவரம் அடையும்.