Published : 24 Jan 2014 10:25 AM
Last Updated : 24 Jan 2014 10:25 AM

ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞர் சரமாரி வெட்டிக் கொலை- மணல் பிரச்சினையில் பழிக்குப்பழியாக நடந்த 3-வது சம்பவம்

ஓட்டலில் சாப்பிட்டுக் கொண் டிருந்த வழக்கறிஞரை 3 பேர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். மணல் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பழிக்குப்பழியாக மூன்று கொலைகள் நடந்துள்ளன.

சென்னை அமைந்தகரை தேவகி அம்மன் தெருவில் வசித்து வந்தவர் நித்யானந்தம் (32). அதிமுகவைச் சேர்ந்த இவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அமைந்தகரை புல்லா ரெட்டி நிழற்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நித்யானந்தம் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் மட்டுமின்றி, 10-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 3 பேர், திடீரென ஓட்டலுக்குள் புகுந்து நித்யானந்தத்தை சரமாரியாக வெட்டினர். கழுத்தி லும் தலையிலும் வெட்டு விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இந்த கொடூர சம்பவத் தைப் பார்த்ததும் ஓட்டலில் இருந்த வர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். ஓட்டல் உரிமையாளர் கண்ணன், டீ மாஸ்டர் ஜெயராஜ் ஆகியோர் செய்வறியாது உறைந்து நின்றுவிட்டனர்.

நித்யானந்தம் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்டபின் கொலையாளிகள் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். கொலை செய்ய பயன்படுத்திய மூன்று அரிவாள்களை ஓட்டலுக்கு அருகே இருந்த ஒரு தெருவில் வீசி

விட்டு சென்றுள்ளனர். ஓட்டல் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் அமைந்தகரை காவல் ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து, நித்யானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.

மணல் குவாரி பிரச்சினை

நித்யானந்தம் கொலை குறித்து போலீஸார் கூறியதாவது:

நித்யானந்தத்தின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்க ழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர். இவரது தந்தை குப்பன், அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவர். பொன்விளைந்த களத்தூரில் உள்ள பாலாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக குப்பனுக்கும் அதேபகுதியைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் விஜயகுமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன்காரணமாக, 2012-ம் ஆண்டில் விஜயகுமாரை கொலை செய்தார் குப்பன். பழிக்குப்பழி வாங்கும் விதமாக ‘குப்பனின் குடும்பத்தையே அழிப் பேன்’ என்று விஜயகுமாரின் தம்பி சுரேஷ் சபதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 6 மாதங்க ளுக்கு முன்பு குப்பன் கொலை செய்யப்பட்டார். இப்போது அவரது மகன் கொலை செய்யப்

பட்டுள்ளார். நித்யானந்தம் கொலைக்கு மணல் பிரச்சினை மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

சிறையில் சதித்திட்டம்

காவல் துறை அதிகாரி ஒருவரி டம் கேட்டபோது, ‘‘குப்பன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுரேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த கைதிகள் 11 பேர், சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும். சிறையில் தான் இதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

குப்பன் கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்ற பயத்தில்தான் திருக்கழுக்குன்றத்தில் இருந்து இடம்மாறி அமைந்தகரையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் நித்யானந்தம். அதே பகுதியில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ஜூனியராகவும் இருந்திருக்கிறார். தினமும் காலையில் அவரை பார்த்துவிட்டு இந்த ஓட்டலில் சாப்பிடுவது நித்யானந்தத்தின் வழக்கம். இதை கொலையாளிகள் நோட்டமிட்டு, சதித்திட்டத்தை நிறை வேற்றியுள்ளனர்.

கொலையாளிகளை அடையாளம் கண்டுபிடித்துவிட்டோம். அவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அமைந்தகரையில் 3-வது கொலை

அமைந்தகரையில் கடந்த செப்டம்பரில் அதிமுக பிரமுகர் பாபுவும், அக்டோபரில் அதிமுக பகுதிச் செயலாளர் கஸ்தூரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போது அதிமுகவைச் சேர்ந்த நித்யானந்தம் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 4 மாதத்தில் 3 அதிமுகவினர் அமைந்தகரை பகுதியில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x