சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளும் அப்பாவிகளா?- விடுதலை கோஷத்தை எதிர்க்கும் போலீஸ் குடும்பங்கள்

சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளும் அப்பாவிகளா?- விடுதலை கோஷத்தை எதிர்க்கும் போலீஸ் குடும்பங்கள்
Updated on
3 min read

கடந்த 1993-ம் ஆண்டு பாலாறு அருகே சந்தனக் கடத்தல் வீரப்பன் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 22 போலீஸார் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்ப வத்தில் தொடர்புடைய 4 பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக கர்நாடக சிறைகளில் உள்ளனர். ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க செய்வதுபோல் இவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தற்போது ஒருசாராரிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சவாலாக இருந்த வீரப்பன்

தமிழக-கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை யாரும் மறந் திருக்க முடியாது.

20 ஆண்டுகளை பின்நோக்கி சென்று பார்த்தால் தமிழக, கர்நாடக மாநிலங்களில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் செய்தியே அனைத்து நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாக இருக்கும். தினம் ஒரு கடத்தல், தினம் ஒரு அதிகாரி கொலை, அதிரடிப்படை தேடுதல் வேட்டை என வீரப்பனின் செய்கை போலீஸ் உயர் அதிகாரி களை கொதிப்படைய செய்தது.

கன்னட நடிகர் ராஜ்குமார், நாகப்பா ஆகிய பிரபலங்களையும் விட்டு வைக்காமல், கடத்தலை அரங்கேற்றி, பணம் பார்த்த வரலாறுகள், அவர்களது கூட்டாளி களுக்கே வெளிச்சம்.

மேட்டூர், கொளத்தூரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன், வீரப்பனை பிடித்தே தீருவது என சபதமிட்டு, தனது திருமணத்தையே ஒதுக்கி வைத்தவர். சந்தனக் கடத்தல் வீரப்பனின் எதிரி பட்டியலில் கோபாலகிருஷ்ணன் பெயர் முதல் இடத்தில் இருந்தது.

கடந்த 1993-ம் ஆண்டு கோபால கிருஷ்ணன், வீரப்பனை சுட்டுக் கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தார். இது, வீரப்பனை கோப மடையச் செய்தது. இருவரில் யார் யாரை கொல்வது என சினிமா பாணியிலான பல்வேறு திருப்பு முனைகளை கொண்டு, காட்சிகள் அரங்கேறின.

வீரப்பன், காவல்துறை அதிகாரி களை வேவு பார்த்து, அவர்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு, தகவல் தெரிவிக்க உளவாளிகளை வைத்திருந்தார். உளவு பார்க்க வந்தவர்கள், வீரப்பன் இருக்கும் இடம் தெரியும் என போலீஸ் உயர் அதிகாரிகளிடம் நாடகமாடி நம்ப வைத்தனர். வீரப்பன் வலையில் சிக்கவைக்க போட்ட திட்டத்தை அறியாமல், 1993-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, கோபாலகிருஷ்ணன் ஐபிஎஸ் தலைமையில் தமிழக, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த 41 போலீஸார் மாதேஸ்வர மலை (எம்.எம். ஹில்) நோக்கி பாலாறை கடந்து சுரக்காமடுவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

வீரப்பனை அடையாளம் காட்டுவதாக வந்த சைமனும், போலீஸாரின் வாகனத்தில் பயணம் செய்தார். சுரக்காமடுவு பகுதியில் 14 இடங்களில் கண்ணிவெடியை சந்தனக்கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் பதுக்கி வைத்திருந்தனர். முன்னாள் இரண்டு போலீஸ் பஸ்கள் செல்ல, இரண்டு வண்டிகள் கடந்து ஜீப்பில் கோபாலகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தார்.

சந்தனக்கடத்தல் வீரப்பனும், கூட்டாளிகளும், அனுமதியின்றி கல் குவாரி நடத்தும் உரிமையாளர் களை மிரட்டி பிடுங்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளும், மருந்துப் பொருட்களும், கண்ணிவெடியாக மண்ணில் புதைந்து இருந்தது தெரியாமல், போலீஸ் பஸ் சென்றதுதான் தாமதம். படுபயங்கரமான சத் தத்துடன் கண்ணிவெடிகள் வெடிக்க, சில நொடிகளில் 100 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பஸ், ஜீப் தூக்கி வீசப்பட்டது. ரத்தமும், சதையுமாய், உயிரற்ற உடலாய் 20 போலீஸார், இரண்டு வனத்துறை காவலர்கள் என 22 பேர் இறந்தனர். 5 தமிழக போலீஸ் அதிகாரிகள், 7 கர்நாடக போலீஸார் உள்பட மொத் தம் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் கோபாலகிருஷ்ணனும் ஒருவர். சிறிய காயங்களுடன் வீரப்பன் கூட்டாளி சைமன் வனத்துக்குள் தப்பி ஓடிவிட்டார்.

இந்த கோர தாக்குதல் தொடர்பாக வீரப்பன், முத்து லட்சுமி, கொளத்தூர் மணி, சிவ சுப்பிரமணியன், சவுரியப்பன், பாப்பாத்தி, போண்டா பசவா, எர்னா உள்பட 124 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 50 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் பலர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்து 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட பிலவேந்திரன், மீசை மாதையன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகி யோரை கர்நாடக போலீஸார் கைது செய்து 20 ஆண்டுகளாக பல்வேறு சிறைகளில் அடைத்து வைத்தனர்.

இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், காலம் கடந்து குடி யரசுத் தலைவரின் கருணை மனு தள்ளுபடி செய்தது. கடந்த ஜனவரி 21-ம் தேதி இவர்கள் நால்வருக்குமான தூக்கு தண்டனை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் கொலை வழக்கு குற்ற வாளிகளான சாந்தன், பேரறி வாளன், முருகன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, மாநில அரசு விடுதலை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியது. இந்த கோரிக்கையை பின்பற்றி, பாலாறு குண்டு வெடிப்பில் குற்றவாளிகளான இவர்கள் நால்வரும் அப்பாவிகளாகவும், இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் (சாதிய அமைப்புகள் உள்பட) கோரிக்கை எழுப்ப தொடங்கியுள்ளன.

இதுகுறித்து ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``பாலாறு குண்டு வெடிப்பு குறித்து கூற வேண்டு மானால் பல மணி நேரம் கூற வேண்டியிருக்கும். இப்போதுதான் இரண்டு அறுவை சிகிச்சை செய் துள்ளேன். அதுவும் நடமாட முடியாத அளவுக்கு படுக்கை யில் உள்ளேன். உங்களிடம் கொஞ்ச நேரம்கூட பேச இயலாதவனாக இருக்கிறேன். பின்னர் இதுபற்றி விரிவாக உங்களுக்கு பதில் அளிக்கிறேன்” என்றார்.

பாலாறு குண்டுவெடிப்பில் காயமடைந்து 9 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் கோபாலகிருஷ்ணன். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்தார். ஓய்வு காலத்துக்குப் பின் மீண்டும் 2 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

கோபாலகிருஷ்ணன் உடல் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள பிளேட்டுகள், பாலாறு குண்டு வெடிப்பு சம்பவத்தை இன்றும் சித்தரிக்க கூடிய அடையாளமாகவே உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in