Published : 15 Jun 2017 09:01 AM
Last Updated : 15 Jun 2017 09:01 AM

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம்: காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிரான ‘பிடிவாரன்ட்’ நிறுத்திவைப்பு

விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன் றம் உத்தரவிட்டும், அதை செயல் படுத்தாத எரிசக்தி துறைச் செய லாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேற்று காலை பிணையில் வெளி வர முடியாத பிடிவாரன்ட் பிறப் பிக்கப்பட்டது. பின்னர் இதுதொடர் பாக அரசு வழக்கறிஞர் முறை யீடு செய்ததால், மாலையில் பிடி வாரண்ட் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் வெண்பேடு கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, காயாறு கிராமத்தைச் சேர்ந்த கண்ணபிரான் உள்ளிட்ட 12 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் புகழூரில் இருந்து ஒட்டியம்பாக்கம் வரை உயர் மின் அழுத்த கோபுரப்பாதை அமைக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த மின்பாதை கலிவந்தப்பட்டு முதல் ஒட்டியம்பாக்கம் வரை 24 கிமீ தூரத்துக்கு எங்களது கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்கிறது.

இந்த மின்பாதை விப்ரோ மற்றும் சத்யம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப் பட்டு வருகிறது. விவசாய நிலங் களில் மின் பாதை அமைப்பதற்காக 20 மீட்டர் ஆழத்துக்கு குழிகள் தோண்டப்பட்டு, அஸ்திவாரமும் கட்டப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீரும் விவசாயமும் பாதிக்கப்படும். மின்காந்த கதிர் வீச்சினால், கால்நடைகளின் உடல் நலத்துக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்தப்பாதை அமைக்கத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை. எனவே எரிசக்தித் துறை செயலாளர் விக்ரம் கபூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதும் அதிகாரிகள் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என். கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எரிசக்தி துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்களாகியும் ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பி எரிசக்தித் துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில் நேற்று மாலை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்துவோம். எனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் மீதான பிடிவாரன்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், பிடிவாரன்டை நிறுத்தி வைத்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் 23-க்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x